Thursday, March 27, 2014

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: 100% இலக்கை எட்ட வேண்டும்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத
இடஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில்
(2014-15) 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர்களுக்கும் அவர்
அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத
பிற தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பில்
நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட
பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 25 சதவீத
இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த மாணவர் சேர்க்கைக்கான கால
அட்டவணையை நிர்ணயம் செய்து விரிவான
அறிவுரை வழங்கி ஏற்கெனவே
உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கால அட்டவணையைப்
பின்பற்றி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.,
6-ஆம் வகுப்பு போன்ற நுழைவு வகுப்புகளில்
கடந்த கல்வியாண்டில் (2013-14) 23,248
மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனைத்துத் தனியார்
பள்ளிகளிலும் 58,619 இடங்கள் இருந்தன.
இதில் 40 சதவீத அளவுக்கே மாணவர்
சேர்க்கை நடைபெற்றுள்ளது.
அதேபோல், சிறுபான்மையின பள்ளிகள்
தவிர்த்து மெட்ரிக் பள்ளிகளில் 3,550
பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 2,660
பள்ளிகளில் மட்டுமே இந்த
இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
மத்திய அரசு சட்டம் இயற்றி, மாநில
அரசு உரிய வழிகாட்டுதல்
வழங்கி அரசாணை வெளியிட்டும் அதனைப்
பின்பற்றாமல் 25 சதவீத ஒதுக்கீட்டில்
சேர்க்கை மறுக்கப்பட்டதாக பல பள்ளிகளின்
மீது புகார்கள் பெறப்பட்டன.
இந்தக் குறைகளைக் களையும் வகையில்
2014-15-ஆம் கல்வியாண்டில்
சிறுபான்மையற்ற அனைத்து தனியார்
பள்ளிகளிலும் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 100
சதவீத இலக்கை (58,619 இடங்கள்) அடைய
உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அந்த இலக்கினை எட்ட முழுமையான
ஒத்துழைப்பு தராத பள்ளிகள்
மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள்
இது தொடர்பாக மக்களிடையே போதிய
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வப்போது திடீர் ஆய்வுசெய்து இந்த
இடஒதுக்கீட்டு முறை
நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை
உறுதிசெய்ய வேண்டும்.
தேவைப்பட்டால், அந்தந்த மாவட்ட ஆட்சித்
தலைவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
ஆகியோருடன் இணைந்து உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை:
ஏப்ரல் 2: நுழைவு வகுப்புகளில் 25 சதவீத
இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களின்
எண்ணிக்கையை அறிவிப்புப் பலகையில்
வெளியிட வேண்டும்.
மே 2: விண்ணப்பங்கள் வரவேற்பு.
மே 3: அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்ப
விநியோகம் தொடக்கம்.
மே 9: விண்ணப்பங்களைப் பெறவும் மற்றும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்கவும் கடைசி தேதி.
மே 11: இந்த ஒதுக்கீட்டில் சேர தகுதியான
மற்றும் தகுதியற்ற பெற்றோர்களின்
விவரங்களை வெளியிட வேண்டும்.
மே 14: 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான
விண்ணப்பங்கள், அதற்கான இடங்களை விட
அதிகமாக இருந்தால்,
விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன் எண்
வழங்கி உரியவர்களை ரேண்டம் முறையில்
தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த
பிறகு 10 சதவீதம் காத்திருப்போர் பட்டியலுடன்
தகவல் பலகையில் அறிவிப்பை வெளியிட
வேண்டும்.
மே 20: இந்த சேர்க்கை தொடர்பான
அறிக்கையை மாவட்ட அளவிலான
கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment