Monday, March 17, 2014

எது உண்மையான கல்வி?

எழுத்தாளர் தோழர்
எஸ்.வி.வேணுகோபாலன் என்னிடம்
ஒருமுறை கேட்டார் “டாக்டர்! நீங்க
கதை (Fiction) எழுதலாமே!” என்று.

நான் சொன்னேன் “ஓ! கல்லூரியில்
படிக்கும்போது நிறைய
எழுதியிருக்கிறேன்”. “அப்படியா?
ஏதேனும் வெளிவந்திருக்கிறதா?”
என்றார் அவர்.
அதற்கு “பரிட்சை விடைத்தாளையெல்லாம்
வெளியிடமாட்டாங்க சார்” என்றேன்.
தேர்வு அறையில்தான்
பேனாவை எடுத்தவுடன் நமக்குள்
இருக்கும் சுஜாதாக்கள் பீறிட்டுக்
கிளம்புகிறார்கள்.
கல்லூரித் தேர்வுகளில்
வேண்டுமானால் கதைவிடலாம்.
ஆனால் நம்முடைய 10, 12-ம்
வகுப்பு தேர்வு முறையில்
கற்பனைக்கு இடம் இருக்கிறதா?
பெரும்பாலும்
இல்லையென்றே சொல்லத்
தோன்றுகிறது.
கற்பனைக்கு இடமளிக்கக் கூடிய
மொழிப் பாடங்களில்
மனப்பாடத்திற்கும், சுருக்கமான
உரைகளுக்குமே முக்கியத்துவம்
கொடுக்கப்படுகின்றன.
தகவல்களை (Facts)
அறிந்து கொள்வதைவிட
கருத்துகளை, கோட்பாடுகளை (Concepts)
அறிந்து கொள்வதே உண்மையான
கல்வி.
ஆனால் இன்றைய
தேர்வு முறையில்கூட நம்முடைய
கற்பனைத் திறனைப்
பயன்படுத்தினால் பல
விஷயங்களை நினைவில்
வைக்கவும் புரிந்து கொள்ளவும்
முடியும். உதாரணமாக
எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
உதாரணம்
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848
மீட்டர். இதைப் பள்ளியில்
‘எட்டு எட்டா நடந்தா நாலு எட்டுல
எவரெஸ்டையே அடைஞ்சிடலாம்’
என்று கற்பனை கலந்து சொல்லிக்
கொடுப்பார்கள். வெறும்
எண்ணை மனப்பாடம் செய்வதைவிட
இந்த முறையில் நம்முடைய
நினைவாற்றல் மேம்படும்.
இதுபோல் நம்முடைய பாடங்களில்
மனப்பாடம் செய்தே ஆகவேண்டிய
விஷயங்களை நினைவில் வைத்துக்
கொள்வதை ஆங்கிலத்தில் Mnemonic
என்பார்கள். தொடர்பே இல்லாத பல
தகவல்களை ஏதோ ஒரு முறையில்
கதைபோல் தொடர்புபடுத்திக்
கொள்வதால் நம்மால் எளிதில்
நினைவில் வைக்க முடிகிறது.
ஹுண்ட்ஸ்
விதி என்று வேதியியலில்
ஒரு விதி உண்டு. எலெக்ட்ரான்கள்
அணுவிலுள்ள அறைகளில்
அடையும்போது முதலில்
ஒவ்வொரு எலெக்ட்ரானும்
ஒவ்வொரு அறையை அடையும்.
எல்லா அறைகளும் நிறைந்த
பின்னே இன்னொரு எலெக்ட்ரானுடன்
துணை சேரும். இதை விளக்கிய
எங்கள் வேதியல் ஆசிரியர்
பேருந்தில் ஏறும்போது முதலில்
எல்லோரும்
தனித்தனி இருக்கைகளில்
அமர்வோம்.
காலி இருக்கையே இல்லையென்றால்தான்
இன்னொருவருடன் அமர்வோம்.
அது போலத்தான்
என்று உவமையுடன் விளக்கியது 20
ஆண்டுகள் கழிந்தும் நினைவில்
நிற்கிறது.
ஒரு தனிம அட்டவணையோ,
சூத்திரமோ அதைக் கற்பனையைப்
பயன்படுத்தி ஏதேனும்
ஒரு கதை போன்றோ,
ஒரு நிகழ்ச்சியைப்
போன்றோ உருமாற்றினால் எளிதில்
மனப்பாடம் செய்து கொள்ளமுடியும்.
படிக்கும் விதத்தில் படித்தால்
தொலைபேசி அட்டவணையைக் கூட
மனப்பாடம் செய்யலாம்- எந்திரன்
சிட்டி போல.

No comments:

Post a Comment