Thursday, April 03, 2014

பிளஸ் 2 தேர்வு விலங்கியல் பிரிவில் தவறான கேள்விக்கு மதிப்பெண் கோரி வழக்கு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு, விலங்கியல் பிரிவில் தவறான கேள்விக்கு, மதிப்பெண் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.

மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்,
விசாரணையை, நாளை தள்ளிவைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த,
சிவஞானம் என்பவர், தாக்கல் செய்த மனு: என் மகள்
சவுதினி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த
மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல் தேர்வு,
விலங்கியல் பிரிவில், 12 கேள்விகளில்,
எட்டு கேள்விகளுக்கு, பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கும், தலா மூன்று மதிப்பெண்.
இதில், "சூரியசக்தி மின்சாரத்தால், ஏற்படும்
ஏதாவது மூன்று விளைவுகள் பற்றி குறிப்பிடுக'
என, ஒரு கேள்வி உள்ளது; இது தவறானது.
"சூரியசக்தி மின்சாரத்தால், சுற்றுப்புறச்சூழலில்
ஏற்படும் ஏதாவது மூன்று விளைவுகள்' என,
இருந்திருக்க வேண்டும். தமிழ் வழியில் எழுதிய
மாணவர்களுக்கு, இந்த கேள்வி சரியாக
இருந்துள்ளது. ஆங்கிலத்தில், தவறுதலாக
இருந்துள்ளது. தேர்வுத் துறையின் தவறால், என்
மகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது."சுற்றுப்புறச்சூழல் விளைவுகள்'
என்ற வார்த்தை விடுபட்டுள்ளது. தவறான
கேள்வியால் ஏற்பட்ட குழப்பத்தால்,
விடையை முறையாக, என் மகள் அளிக்க
முடியவில்லை. அதனால், இந்தப் பாடத்தில், 100
சதவீத மதிப்பெண் கிடைக்காமல் போகலாம்.
போட்டி தேர்வுகளில், ஒரு மதிப்பெண் கூட,
மிகவும் முக்கியம். கணித தேர்வில், தவறான
ஒரு கேள்விக்கு, ஆறு மதிப்பெண் வழங்குவதாக,
தேர்வுத் துறை அறிவித்தது. ஆனால், விலங்கியல்
பிரிவில், தவறான கேள்வி இடம் பெற்றதற்கு, எந்த
பதிலும் இல்லை. தமிழில்
எழுதியவர்களுக்கு ஒரு கேள்வியும், ஆங்கிலத்தில்
எழுதியவர்களுக்கு மற்றொரு கேள்வியும் என,
கேட்க முடியாது. மாணவர்களின் நலன் கருதி,
தவறான கேள்விக்கு, மூன்று மதிப்பெண்கள்
வழங்கியிருக்க வேண்டும். எனவே, உயிரியல்
தேர்வு, விலங்கியல் பிரிவில், தவறான
கேள்விக்கு, மூன்று மதிப்பெண் வழங்க, உத்தரவிட
வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு,
நீதிபதி ராஜேந்திரன் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், அருள் முருகன்
ஆஜரானார். மனுவுக்கு, அரசு தரப்பில் பதிலளிக்க
உத்தரவிட்ட நீதிபதி,
விசாரணையை நாளை தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment