Friday, April 04, 2014

தேர்வுத்துறை மீது விழுந்த கரும்புள்ளி: தினத்தந்தி தலையங்கம்

ஒருவருடைய வாழ்க்கையில் இரு பொதுத்தேர்வுகள்தான் அவர்களுடைய
வாழ்க்கையை நிர்ணயிக்கும்.
இந்த தேர்வுகளில்
எடுக்கும் மதிப்பெண்கள்தான், ஒரு மாணவனின்,
மாணவியின் வளமான எதிர்காலத்துக்கான
கதவுகளை திறந்துவிடுவதாகும். 10–ம்
வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான்,
11–ம் வகுப்பில் நல்ல ‘குரூப்’ கிடைக்கும்.
அதுபோல, 12–வது வகுப்பு பொதுத்தேர்வில்
எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான்
அடுத்து படிக்கப்போகும்
உயர்கல்வியை நிர்ணயிக்கும். எனவேதான்,
மாணவர்கள் இந்த
இரண்டு பொதுத்தேர்வுகளுக்கும், ஓய்வு,
பொழுதுபோக்கு எதுவுமில்லாமல், இரவு–
பகலாக கடுமையாக படிப்பார்கள்.
தேர்வு எழுதும் மாணவர்களின்
விடைத்தாள்களை திருத்துபவர்கள்
ஒரு நீதிபதி போல இருந்து, துல்லியமாக
பார்த்து மதிப்பெண்கள் போடவேண்டும். இந்த
ஆண்டு 10–ம்
வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் 11 லட்சம் பேர்களும், 12–ம்
வகுப்பு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 75 ஆயிரம்
பேர்களும் எழுதினர். 10–ம்
வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் முதல்தாள்
வினாத்தாளை பெற்ற மாணவர்களுக்கு பெரிய
அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு படத்தை போட்டு,
அதுதொடர்பாக விளக்கம் எழுதும்
வினாவுக்கு 5 மார்க் உண்டு. ஆனால், இந்த
ஆண்டு மீன் தொட்டி படம்
போடப்பட்டிருந்ததாக கூறினார்கள்.
யாராவது சொன்னால்தான்
அது மீன்தொட்டி என்று தெரியுமே தவிர,
மற்றவகையில் அது என்னவென்றே தெரியாமல்
கருப்பு அடித்திருந்தது. இதனால் இந்த
கேள்விக்கு பதில் அளிக்க பல
மாணவர்களுக்கு வழியில்லாமல் போய்விட்டது.
இந்த வினாவுக்கு சரியோ,
தவறோ விடையளித்த மாணவர்கள்
அனைவருக்கும் கருணை மார்க் வழங்கவேண்டும்
என்று மாணவர்களிடையே பெரிய
கோரிக்கை எழுந்தது.
இதைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், 12–ம் வகுப்பு கணிதத்தேர்வில் நடந்த
தவறுக்கு உடனடியாக
அரசு தேர்வுத்துறை சார்பில் விளக்கம்
அளித்தாக வேண்டும். இந்த வினாத்தாளில்
ஒரு மதிப்பெண் பகுதியில் 4–
வது கேள்வி ‘ரோ’ என்று அழைக்கப்படும் கணித
குறியீட்டுக்கு பதிலாக, ‘பி’ என்ற ஆங்கில
எழுத்து அச்சடிக்கப்பட்ட தவறு,
மாணவர்களை பெரிய அளவில் குழப்பியது.
அதுபோல, 6 மதிப்பெண் பகுதியில் 47–
வது கேள்வியில் ‘லாக் எக்ஸ் பேஸ் இ’
என்று இருப்பதற்கு பதிலாக, ‘லாக் இ டூ பவர்
எக்ஸ்’ என்பது போன்ற கணித குறியீடுகள்
தவறாக அச்சிடப்பட்டிருந்தன. மேலும், 16–
வது கேள்வியும் (1 மார்க்) தவறாக
அச்சிடப்பட்டிருந்தது.
கணிதத்தேர்வு என்பது சாதாரண தேர்வு அல்ல.
அந்த மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர
அடிப்படை கணிதத்தேர்வு மதிப்பெண்கள்தான்.
ரேங்க் பட்டியலில் ½ மார்க்கூட
ஒரு மாணவனை முன்னேயும்
கொண்டுபோய்விடும், பின்னேயும்
கீழே தள்ளிவிடும். ஆகவே, கணிதத்தேர்வில்
நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்பதில்
மாணவர்கள் முஸ்தீபாக இருப்பார்கள். இந்த
தேர்வில் இந்த இரு கேள்விகளுக்கும்
விடையளிக்க முயற்சித்த மாணவர்கள்
குழம்பிப்போய் சிலர்
வேறு கேள்விகளுக்கு தாவினார்கள். இதனால்
அவர்களது பொன்னான நேரம் வீணானது. சிலர்
முயன்று தவறான விடை எழுதினார்கள்.
தாங்கள் செய்த தவறை மறைப்பதற்கு,
அரசு துறை இந்த கேள்விகளுக்கு பதில்
எழுதிய அனைவருக்கும் ஆங்கில வழியில்
தேர்வு எழுதியவர்களுக்கு 7 மதிப்பெண்களும்,
தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு 8
மதிப்பெண்களும் கருணை மார்க் வழங்க
முடிவு செய்திருக்கிறார்களாம். சரிதான். இந்த
கேள்விக்கு பதில் அளிக்க முயற்சித்த
மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்
முழு மதிப்பெண்ணும் கிடைத்துவிடும்.
அப்படியானால், இந்த கேள்விக்கு பதில்
அளிக்காமல், ஏதோ தவறாக கேட்டுவிட்டார்கள்
என்று வேறு கேள்விக்கு பதில் அளிக்க
சென்றவர்கள் பாவம் செய்தவர்களா?, அவர்கள்
வேறு கேள்விக்கான
விடையை பாதியளவு சரியாக எழுதினால்
பாதி மார்க்தான் கிடைத்திருக்கும். இந்த
வினாத்தாள்களில்
தவறு நேர்ந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
எந்த முனையில் தவறு ஏற்பட்டது?,
கேள்வித்தாள் தயாரித்ததிலா?, அதை சரிபார்க்க
தவறியதாலா? அச்சுப்பிழையா?, அப்படியானால்
புரூப் பார்த்தவர்கள் என்ன செய்தார்கள்?
என்பதற்கான நடவடிக்கைகளை கீழ்மட்டம் முதல்
தேர்வுத்துறையின் மேல்மட்டம்
வரை எடுத்தாலும், இந்த கரும்புள்ளி தீராது.

No comments:

Post a Comment