Tuesday, April 08, 2014

ஆட்டிஸம்… அதிர வேண்டாம்… அன்பு காட்டுங்கள்! பெற்றோர்களுக்கான ஓர் பதிவு !!

ஆட்டிஸம் (Autism)… பரவலாகக் கவனம்
பெறாத, நரம்பு மண்டல நோய். உணர்வுகள் வெளிக்காட்டாத முகம், நோக்கம் எதுவுமற்ற பார்வை, சம்பந்தமில்லாத செயல்பாடுகள்
என்று ஆட்டிஸ குழந்தைகளையும்,

பெரியவர்களையும் நாம்
அவ்வப்போது கவனித்திருக்கலாம். ‘உலக
அளவில் ஆயிரத்தில்
இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட
வாய்ப்புள்ள நோய் இது’ என்கிறது ஆய்வுத்
தகவல். ஆனால், அதற்கான
சிகிச்சை மையங்கள்,
தேவையை ஈடுகட்டும் விதத்தில்
இல்லை என்பது, வருத்தத் தகவல்.
அதேசமயம்… ”அன்பு மற்றும் ஏற்றுக்
கொள்ளல்… இது ரெண்டும்தான் ஆட்டிஸ
நோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நாம்
கொடுக்கும் முதல் மற்றும் முக்கிய
மருந்து!” என்று நல்வழி காட்டுகிறார்,
ஸ்ரீவித்யா. இவருடைய
ஐந்தரை வயது மகன் அவனீஷ், ஆட்டிஸ
குழந்தை!
சென்னை, நாவலூரில் உள்ள
ஸ்ரீவித்யாவின் இல்லத்தில், அவரைச்
சந்தித்தோம். அவரின் வார்த்தைகள்,
ஆட்டிஸ குழந்தைகளுக்கு, பெற்றோர்கள்
கொடுக்க வேண்டிய அன்பு,
சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வு பாடம்!
அவனீஷ் நம்மைப் பார்த்தவுடன்
வரவேற்கும்விதமாக சிரிக்க, ‘குட்!’
என்று அவனை அமர வைத்துவிட்டு,
நம்மிடம் பேசத் தொடங்கினார் ஸ்ரீவித்யா.
”நான், கம்ப்யூட்டர் இன்ஜீனியர்.
திருமணத்துக்கு அப்புறம் நானும் என்
கணவர் கிருஷ்ணனும் அமெரிக்காவில்
வேலை பார்த்தோம். முதலில் அவனீஷ்.
அடுத்து, ஒரு மகள் என
எங்களுக்கு இரண்டு குழந்தைங்க!
அவனீஷ்க்கு ரெண்டரை வயதானப்போ,
அவன் நார்மலா இல்லைனு மனசுக்குப்
பட்டது. கூப்பிட்டா திரும்பிப் பார்க்க
மாட்டான்.
நம்மோட எந்தத் தொடர்பும் இல்லாம…
தனி உலகத்தில் இருப்பான்.’ஆட்டிஸத்தால
பாதிக்கப்பட்டிருக்கான்’னு டாக்டர்
சொன்னப்ப… அதிர்ந்தோம்!
எந்தப் பெற்றோருக்குமே அதிர்ச்சியான
செய்திதான். ஆனா, அதைக்
கடந்து அடுத்து என்ன
பண்ணலாம்னு யோசிச்சோம்.
‘இந்தியாவுக்கே திரும்பிடலாம்’னு
கிளம்பி வந்தோம். ஆனா, இங்க ஆட்டிஸ
குழந்தைகளுக்கான சிகிச்சையில
பெரிசா எந்த முயற்சிகளும், மையங்களும்
இல்லை.
மறுபடியும்
அமெரிக்காவுக்கே திரும்பினோம். அங்க
இருக்கற ‘ஆட்டிஸம் டீரிட்மென்ட்
சென்டர்’ (Autism Treatment Center of
America)பத்தி தெரிய வந்துச்சு. அவங்கள
அணுகினப்ப… ‘அவனீஷ்கிட்ட
எப்படி நடந்துக்கணும்?’னு எனக்கும்
கணவருக்கும் ரெண்டு வார
பயிற்சி கொடுத்தாங்க. ‘இந்தப் பயிற்சிதான்
உங்க பையனுக்கான சிகிச்சை. ஆமா…
உங்களோட அணுகுமுறைதான்
அவனை ஆட்டிஸத்தில் இருந்து குணம்
பெற வைக்கிற
மருந்து!’னு வலியுறுத்திச்
சொல்லி அனுப்பினாங்க.
மறுபடியும் இந்தியா திரும்பின நாங்க…
வீட்டில் வைத்தே பயிற்சியை ஆரம்பிச்சோம்.
ஆட்டிஸ குழந்தைகளைப் பொறுத்தவரை,
அவங்களுக்கு சமூகப் பழக்க
வழக்கங்களும் மற்றவங்களோட
தொடர்புகொள்ற திறனும்தான் முக்கியப்
பிரச்னையா இருக்கும். நிறைய கவனச்
சிதறல் இருக்கும்.
ஒரே வேலையை தொடர்ந்து செய்துட்டே
இருப்பாங்க. மத்த குழந்தைகள்
மாதிரி தூக்கினாலோ, கொஞ்சினாலோ, ஏன்
தொட்டாகூட
இவங்களுக்கு அது எதுக்காகனு
தெரியாது. எந்தவித உணர்ச்சியையும்
வெளிப்படுத்தாம தான்
பாட்டுக்கு இருப்பாங்க. இதையெல்லாம்
சரி செய்ற விதமா, நம்மளோட
பயிற்சி இருக்கணும்.
அதில் முதல்படியா, ‘அவனீஷோட உலகம்
வித்தியாசமானது’னு விலகி நிற்காம,
அதுக்குள்ள போனோம். அவனோட கவனச்
சிதறலைக் குறைக்க, ஒரே ரூமில்
வெச்சுருந்தோம். அவனீஷ் தொடர்ந்து எச்சில்
துப்பிட்டே இருப்பான். அதை எல்லாம்
சகிச்சுட்டு, அவன் என்ன செய்தாலும்
பதிலுக்கு அன்பை மட்டுமே கொடுத்தோம்.
அவனோட நிறைய நேரம் செலவிட்டோம்.
அவன் என்ன செய்தாலும்,
அது தப்பாகவே இருந்தாலும் நாமளும்
அதேபோல செய்யணும். பிறகுதான்,
கொஞ்சமா அது தப்புங்கறத புரிய வைக்கற
மாதிரி, சரியானதை செய்ய வைக்கணும்!
‘நாம மட்டுமே பயிற்சி கொடுத்தா போதாது…
அவனோட சமூகத் தொடர்புகள்
அதிகரிக்கறதுக்கு வேற
வழிகளை நாடணும்’னு முடிவெடுத்தோம்.
‘ஆட்டிஸத்தால பாதிக்கப்பட்ட எங்கள்
பையனுக்கு பயிற்சி கொடுக்க, சமூக
சேவையில் ஆர்வமுள்ள வாலன்டியர்கள்
தேவை’னு விளம்பரம் கொடுத்தோம்.
ஆறு பேர் வந்தாங்க. சகிப்புத்தன்மை,
கனிவான குணம் இதெல்லாம் ஆட்டிஸக்
குழந்தைகளுக்கு பயிற்சி
கொடுக்கறவங்களுக்கு அவசியத் தேவை.
அதன் அடிப்படையில, நேர்காணல்
மூலமா பாலா, கணபதிராம்
ரெண்டு பேரையும் தேர்ந்தெடுத்தோம்.
அவங்களுக்கும் பயிற்சியைக் கொடுத்தோம்.
இப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம்
வந்து, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம…
அவனீஷ்க்கு அவங்க
பயிற்சி கொடுக்கறாங்க.
இப்போ நல்ல முன்னேற்றம் தெரியுது.
முன்னயெல்லாம் என்னையும் அவங்க
அப்பாவையும் தவிர, புது மனுஷங்க
யார்கிட்டயும் அவனுக்குப் பழகத்
தெரியாது. மிரள்வான். இப்போ…
வீட்டுக்கு வர்ற விருந்தினர்களைப்
பார்த்து சிரிக்கப் பழகியிருக்கான்.
விளையாடினா,
சந்தோஷமா விளையாடுறான். முத்தம்
கொடுத்தா… பதிலுக்கு முத்தம்
கொடுக்கிறான்” என்று மகிழ்வுற்றவர்,
”ஆட்டிஸ குழந்தைகளுக்கான
பயிற்சியை கத்துக்க ஆர்வமாக இருக்கிற
வாலன்டியர்ஸ், ஆட்டிஸ குழந்தைகளோட
பெற்றோர் இவங்களுக்கெல்லாம் அதுக்கான
பயிற்சியை இலவசமாவே சொல்லித் தர
நாங்க ஆர்வமா இருக்கோம். இதனால் பல
ஆட்டிஸ குழந்தைகள் பயன்பெறுவாங்க!”
- ஸ்ரீவித்யாவின் வார்த்தைகளில் அக்கறை.
அவனீஷ்க்கு பயிற்சி அளித்து வரும்
வாலன்டியர்களில் ஒருவரான பாலா, ”நான்
சி.டி.எஸ் கம்பெனியில
வேலை பார்க்கிறேன். சமூக சேவையில்
ஆர்வம் உள்ளதால, இவங்களோட விளம்பரம்
பார்த்து வந்தேன். ஆறு மாசத்துக்கு முன்
பார்த்த அவனீஷ் வேற, இப்போ பார்க்கிற
அவனீஷ் வேற. நம்மூரில் ஆட்டிஸ
சிகிச்சை பற்றிய
விழிப்பு உணர்வு இல்லாமல்
இருக்கறதும், அதற்கான
சிகிச்சை மையங்கள்
குறைவா இருக்கறதும் வருத்தப்பட
வேண்டிய விஷயம். ஆனாலும்,
ஆர்வமுள்ள வாலன்டியர்ஸ்….
பயிற்சி எடுத்துட்டு, இந்த நோயால்
பாதிக்கப்பட்டிருக்குற
அவனீஷ்களை குணப்படுத்த உதவலாமே?!”
என்றார் வேண்டுகோளாய்.

No comments:

Post a Comment