Wednesday, May 28, 2014

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் தமிழகம் 97.02 சதவீதம் தேர்ச்சி

சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் மூலம் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய தென் மண்டல மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது.
இதில் தமிழகம் 97.02 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், டாமன், டையூ ஆகிய பகுதிகள் அடங்கும். இவற்றில்  இயங்கும் பள்ளிகளின் 12ம் வகுப்பு தேர்வு  முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. தென் மண்டல பள்ளிகளுக்கான இயக்குனர் சுதர்சன்ராவ் நேற்று காலை தேர்வு முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது: தென் மண்டலத்தில் அடங்கிய மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளிகள் மூலம் 45,064 மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் 41,861 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.89. தமிழ் நாட்டில் மட்டும் 6,163 மாணவர்களும், 4,592 மாணவிகளும் இந்த தேர்வு எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 5,929 மாணவர்களும், 4,505 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு தேர்ச்சி 97.02 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் 1,700 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் 320 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 96.56 சதவீதம். தென் மண்டலத்தில் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் 57.27 சதவீதம்.  மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் மதிப்பெண் தொடர்பான விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு விடைத்தாள் நகல் பெற வேண்டும். அதன்பின்பே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று இறுதி நாள் என்பதால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்கள் இணைய தளத்தில் இருந்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பின்னர் ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்ச்சி சான்றுகள் வழங்கப்படும். இவ்வாறு சுதர்சன் ராவ் தெரிவித்தார்.   

No comments:

Post a Comment