Wednesday, May 28, 2014

பி.இ. கலந்தாய்வு: 2.12 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முடிந்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 2.12 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 27) மாலை 5 மணி வரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. 2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டது.
கடைசி நாள் மாலை 5 மணி வரை 2 லட்சத்து 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்: பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (மே 27) அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. கடைசி நாளில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
கடைசி நாள் மாலை 5 மணி வரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 500 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதுபோல் வெளி மாவட்டங்களில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்களும் வந்து சேரவேண்டி உள்ளது.
எனவே, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சான்றிதழை கலந்தாய்வின்போது சமர்ப்பிக்கலாம்: இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சிலவற்றில் மாற்றுச் சான்றிதழ்கள் (டி.சி) இடம்பெறவில்லை. மேலும் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் விண்ணப்பங்களில் மதிப்பெண் விவரங்களும் இடம்பெறவில்லை.
இந்த மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றவுடன், அவற்றின் நகலைச் சமர்ப்பிப்பது சிறந்தது. அவ்வாறு சமர்ப்பிக்க இயலாதவர்கள் கலந்தாய்வின்போது சமர்ப்பிப்பது அவசியம் என்றார் அவர்

No comments:

Post a Comment