Saturday, July 05, 2014

எது சமச்சீர்க் கல்வி? சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைப் பற்றி ஆய்வின் அடிப்படையில் ஓர் அலசல்

சமச்சீர்க் கல்வி தொடர்பான சர்ச்சைகள்
தீர்ந்தபாடில்லை. அண்மையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியுடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனம் ஒன்று, சமச்சீர்ப் பாடநூல்களை ஆய்வுசெய்து அவற்றின் சாதகபாதகங்கள்குறித்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.

அந்த அறிக்கை இப்படிக் கூறுகிறது: ‘கற்றலின்
சுமை குறைந்துள்ளது; ப ாடநூல்கள் படிக்க,
புரிந்துகொள்ள எளிதாக உள்ளன. மாணவர்கள்
சிந்திப்பதை ஊக்குவிக்கும் வகையில் பாடநூல்கள்
அமைந்துள்ளன. அதே சமயம், பாடநூல்களின்
தரம்குறித்தும் நாம் யோசிக்க வேண்டியுள்ளது;
குறிப்பாக, ஆங்கிலப் பாடங்களின் தரம் போதுமான
அளவுக்கு இல்லை; மேலும், இந்தப் பாடநூல்களைப்
படித்துவிட்டு மாணவர்களால் உயர் கல்விக்கான
போட்டியில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள
முடியும் என்று தோன்றவில்லை.’
சமச்சீர்ப் பாடங்கள் தொடர்ந்து மதிப்பிடப்பட
வேண்டியவை என்பதில் நமக்குக்
கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், ஆய்வில்
துலங்கியுள்ள ‘கண்டுபிடிப்புகள்' சமச்சீர்க்
கல்விகுறித்துத் தனியார் (முன்னாள்) மெட்ரிக்
பள்ளிகளும் அப்பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் பெற்றோரும்
தொடர்ந்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
ஒத்தவையாக இருப்பதுதான் இங்கு கவனிக்க
வேண்டியது.
சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் நிறை, குறைகள்
மிகக் குறுகிய காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட
பாடத்திட்டமல்ல சமச்சீர்க் கல்வித் திட்டம். ஆனால்,
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசிரியர்கள்
மட்டுமின்றி சமூக அக்கறையுடைய எழுத்தாளர்கள்,
ஆய்வாளர்கள், கற்றல் முறையில் ஆக்கபூர்வமான
பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் எனப் பலதரப்
பட்டவர்கள் பாடநூல்கள் உருவாக்கத்தில்
பங்கேற்றனர். புத்தகங்களில் பலரும் புகுத்த
நினைத்த புதுமைகளை ஓர் அளவுக்கு மேல் புகுத்த
முடியவில்லை. பல ஆண்டு களாக மாறாத
தன்மையுடனும், கற்றல் முறையில் பெரிய
மாற்றங்களைச் செய்யாமலும்
கற்பித்துவரப்பட்டவற்றில் மாற்றங்களைக்
கொண்டுவருவது என்பது அத்தனை எளிதல்ல.
மேலும், எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர
வேண்டும் என்பதையும் செய்துபார்த்துதான்
கற்றுக்கொள்ள முடியுமே தவிர,
முன்கூட்டியே அல்ல.
தொடர்ந்து பள்ளிக்கல்விகுறித்த விவாதங்கள்
தமிழ்நாட்டில் போதுமான
அளவுக்கு நடைபெறாததும் இந்தப்
பரிசோதனை முயற்சியின் தன்மையைப்
பாதித்தது எனலாம். அடுத்து, ஆசிரியர்
பயிற்சிக்கான கல்லூரிகளும் நிறுவனங்களும்
ஆயிரம் இருந்தும் கற்றல் முறையைப்
பற்றி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படாமல்
இருப்பதும், இந்தப் பயிற்சி மையங்கள் லாப
நோக்கத்துக்காக மட்டும் நடத்தப்படுவதும்,
இத்தகைய புதிய முயற்சிகளின் வீச்சையும்
ஆழத்தையும் கட்டுப்படுத்திவிடுகின்றன.
இருப்பினும் அதுவரை இருந்துவந்துள்ள பாடநூல்
களுடன் ஒப்பிடும்போது, சமச்சீர்க் கல்வித்
திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நூல்கள்
மேம்பட்டவையாக உள்ளன என்பதே உண்மை.
அவற்றில் உள்ள நிறை, குறைகள் ஒருபுறமிருக்க,
அவற்றை மேலும் சீர்ப்படுத்துவதும், அத்தகைய
சீர்ப்படுத்துதலை மெட்ரிக் பள்ளி வல்லுநர்கள்
சொல்வதைக் கொண்டு மட்டும் தீர்மானிக்காமல்,
வேறு அளவுகோல்களைக் கொண்டு யோசிப்பதும்
அவசியம்.
மெட்ரிக் பாடத்திட்டம்பற்றிப் பேசலாமா?
மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திவந்துள்ள பாட
திட்டங்களைப் பற்றிய ஆய்வும் நமக்குத் தேவை.
இத்தகைய ஆய்வுக்கான வெள்ளோட்டமாக
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிரன்தர் என்ற
ஆய்வு மையம் தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்
பிரதேசம், குஜராத், டெல்லி அகிய மாநிலங்களில்
பயன்படுத்தப்பட்டுவரும் வகுப்பு 1-10
வரைக்குமான சமூகவியல் பாடநூல்களையும்
மொழிப் பாடநூல்களையும் (ஆங்கிலத்தையும்,
அந்தந்த மாநிலத்துக்குரிய மொழிகளைக்
கற்பிக்கும் நூல்களையும்) மிக ஆழமான
ஆய்வுக்கு உட்படுத்தியது. அரசுப் பள்ளிகளில்
பயன்படுத்தப்படும் நூல்களும், தனியார் பள்ளிகள்
பயன்படுத்தும் நூல்களும் என
தமிழ்நாட்டிலிருந்து 36 பாடநூல்கள்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மெட்ரிக்
பள்ளிகளில் அன்று பயன்படுத்தப்பட்டுவந்த பல
பாடநூல்களும் இதில் அடங்கும். தமிழ்நாட்டைச்
சேர்ந்த, ஆங்கிலமும் தமிழும் தெரிந்த, கல்விப்
புலத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட
வல்லுநர்கள்தான் இந்த ஆய்வைச் செய்தனர்.
தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் பாடநூல்கள்
முன்வைக்கும் சமுதாயப் பார்வை, ஆங்கிலம்
என்பதை ஒரு மொழியாகக் கற்பிக்காமல்
வாழ்க்கை முறையாக, வர்க்க,
சாதி அடையாளத்துக்கான குறியீடாகக் கற்பிக்கும்
முறைமை, சமூகவியல் பாடங்களில், குறிப்பாக
வரலாறுபற்றிய பாடங்களில் காணப்படும்
பழமையான, தலைமுறை தலைமுறையாகச்
சொல்லப்பட்டுவரும் அதே புளித்துப்போன
விவரங்கள், புவியியல் பாடங்களை எழுதியவர்கள்
இணையத்திலிருந்து அப்படியே தகவல்களை
இறக்கி, நமது சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற
விஷயங்களைப் பாடங்களாக வழங்கியது -
முக்கியமான பாடநூல் பதிப்பாளர்களின் நூல்களும்
சரி, பாடநூல் தயாரிப்பை வியாபாரமாக மட்டும்
காணும் பதிப்பாளர்களின் நூல்களும் சரி, இந்த
இரண்டு வகை நூல்களும் இப்படித்தான்
இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட ஒப்பீடு சரியா?
சி.பி.எஸ்.சி. பாடநூல்களுடன் சமச்சீர்ப்
பாடத்திட்டத்தை ஒப்பிட்டுப் பேசும் பெற்றோர்களும்
ஆசிரியர்களும் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் -
அந்த நூல்கள் இவர்கள் விரும்பும் ‘தரத்தை'யோ,
இவர்கள் பயிற்றுவிக்க விரும்பும் போட்டிக்கான
கல்வியையோ முன்னிட்டுத்
தயாரிக்கப்பட்டவை அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட,
கல்வி மறுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த
மாணவர்களின் வாழ்க்கை நிலைகள், சாதியாலும்,
பொருளாதார, சமய, பிராந்திய வேறுபாடுகளாலும்
பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும்
தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு கூறுகள்
ஆகியவற்றை அக்கறையோடும், அதே சமயம்
கறாராகவும் பதிவுசெய்யும் பாடங்கள் தேவை என்ற
அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. குறிப்பாக,
கடந்த 20 ஆண்டுகளாக, இத்தகைய விஷயங்களைத்
தமது எழுத்துகளில் பதிவுசெய்துவரும் தலித்
சமுதாயத்தினர், பெண்கள், பழங்குடியினர்
ஆகியோரின்
புரிதல்களை உள்வாங்கிக்கொண்டு பாடத்திட்டம்
அமைய வேண்டும் என்ற அக்கறையிலும்தான்
தற்போது அமலில் இருக்கும் சி.பி.எஸ்.சி.
பாடநூல்கள், அதாவது, என்.சி.ஆர்.டி.
தயாரித்துள்ள நூல்கள் அமைந்துள்ளன. தனியார்
நடத்தும் பதிப்பகங்கள் என்.சி.ஆர்.டி. வல்லுநர்கள்
செய்த வேலையில் ஒரு பங்குகூடச் செய்யாமல்,
அவற்றை அடியொற்றி, அவற்றை முன்மாதிரியாகக்
கொண்டு அவசரஅவசரமாகப் பாடநூல்களைத்
தயாரித்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்
கூடாது. என்.சி.ஆர்.டி. நூல்களையும் தனியார்
பதிப்பகங்களின் நூல்களையும் ஒப்பிட்டுப்
பார்ப்பவர்களுக்கு இது உடனடியாக
விளங்கிவிடும்.
உண்மையான தரம் எது?
எனவே, சமச்சீர்க் கல்வியின் தரத்தைப் பற்றிப்
பேசுவோர், தரம் என்று எதைக் கூறுகிறார்கள்
என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஏழை, கிராமப்புறக் குழந்தைகளுக்குரிய
கல்வி தங்களுக்குப் போதுமானதல்ல என்ற
இவர்களின்
கூற்று இவர்களது மேட்டுக்குடி மனநிலையைக்
காட்டுகிறது. எல்லாக் குழந்தைகளும்
ஒரே மாதிரியான கல்வியைப் பயில வேண்டும்
என்பதல்ல நாம் சொல்லவருவது. குழந்தைகளின்
வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ப
வகுப்பறைகளை அமைத்து, அச்சூழலுக்குரிய
பிரச்சினைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு,
வளமான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு,
குழந்தைகளைச் சிந்திக்க வைக்கும் கல்வியையும்
அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும்
கல்வியையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் பொதுவான கட்டணமும்,
மரியாதையும், சாதி வேறுபாடுகளையும்
பாகுபாடுகளையும் வெல்லும் பொதுமையும்
பள்ளிகளில் இருப்பதுதான் சமச்சீர்க் கல்விக்கான
பண்புக் கூறுகளாக இருக்க முடியும். கூடவே,
ஆசிரியர்கள் எல்லாச் சமுதாயங்களையும்
சேர்ந்தவர்களாக இருப்பதும் முக்கியம். அதுபோல,
கல்வியை நிர்வகிக்கும் அலுவலர்கள் சமச்சீர்
என்பதன் தன்மையை உணர்ந்தவர்களாக இருத்தலும்
அவசியம்.
கல்விப் புலத்தில் பல போக்குகள்
இருப்பது நல்லது தான். பல
பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதும்
முக்கியம். ஆனால், இவற்றை மேற்கொள்வோர்,
காலம்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டுவந்துள்ள
மாணவர் களின் நலனை, போனால் போகிறது என்ற
அலட்சிய மனநிலையுடன் போகிற போக்கில்
அணுகினால் எத்தனை சிறப்பான கற்பித்தல்
முறை என்றாலும் அதற்குப் பயனில்லாமல்
போய்விடும். பன்மைத்துவம் என்ற பெயரில்
மறுபடியும் சாதி ஆதிக்கமும் அறிவாளர்களின்
அதிகாரமும்தான் எஞ்சி நிற்கும்.
- வ. கீதா, கல்வியாளர்.

No comments:

Post a Comment