Saturday, August 09, 2014

மாணவர் மன்றங்கள் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்: "தினமணி'

கல்லூரி மாணவர் மன்ற உறுப்பினர்கள், தங்களிடையே உள்ள ஒற்றுமையை சமுதாயத்திலும் ஏற்படுத்த முடியுமேயானால், தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.

சென்னை அடையாறில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலை, அறிவியல் கல்லூரி மாணவர் மன்றத் தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கே. வைத்தியநாதன் பேசியது:
உலகம் முழுவதும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிற சமூக சீர்திருத்தவாதிகளும், தலைவர்களும் மாணவர் மன்றங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஒரு மாணவரின் ஆளுமைத் திறன், அவர் படிக்கிற காலகட்டத்திலேயே உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏற்பட்டவைதான் மாணவர் மன்றங்கள்.
விழாவில் முன்னதாகப் பேசிய கல்லூரித் தாளாளர் மீனா முத்தையா கூறுகையில், கல்வி என்பது எழுதப் படிக்கத் தெரிவதோ அல்லது புத்தகங்களைப் படிப்பதோ மட்டுமல்ல. கல்வி என்பது நமது தேசத்தின் பெருமையை உணர்த்துவதாகவும், நாட்டுப்பற்றை ஏற்படுத்தக்கூடியதாகவும் இல்லாமல் போனால், நாம் யார்? நமது பின்னணி என்ன? கலாசாரம் என்ன? என்பதை உணர்த்தாத கல்வியாக இருக்குமேயானால் அப்படிப்பட்ட கல்வியால் எந்தப் பயனுமில்லை என்று மிகச் சரியாகக் கூறினார்.அதாவது, எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதவராக இருப்பவர்களைப் போலத்தான் தன்னுடைய தேசத்தையும், அதன் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ளாமல் கல்வியைக் கற்பவர்கள் இருக்க முடியும் என்பதைத்தான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது.
இன்றைய கல்வி என்பது மிகப் பெரிய வாய்ப்புகளை உலகளாவிய அளவில் ஏற்படுத்தித் தருகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு இந்தக் கல்வி என்பது அடிப்படைப் பண்புகள் பலவற்றை நம்மிடமிருந்து அகற்றி விட்டது என்பதும் உண்மை.
தங்களுடைய குழந்தைகள் படித்து பட்டம் பெற்று, நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய பணியில் அமர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக இந்தப் பெற்றோர்கள் கொண்டிருக்கின்றனரே தவிர, குழந்தைகள் சிறந்த பண்பாளர்களாகவோ, திறமைவாய்ந்தவர்களாகவோ இருக்கிறார்களா என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக இருக்கின்றனர்.
"தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்றார் வள்ளுவப் பேராசான். ஒரு மனிதன் ஒரு சமுதாயத்தில் பிறந்து, வளர்ந்து, இறக்கும் வரை நானும் இருந்தேன், வாழ்ந்தேன், மடிந்தேன் என்ற வரைமுறைக்கு உள்பட்டு சரித்திரத்தின் பக்கத்தில் ஒரு முத்திரையைப் பதிக்காமலேயே மறைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.மாணவர் மன்றத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவரும், உறுப்பினர்களும், நாளைய சமுதாயத்துக்கு வழிகாட்டிகளாக சமுதாயத்தாலும் தேர்தெடுக்கப்படுவார்களேயானால் நமது சமுதாயம் மிகப் பெரிய மாற்றத்தைக் காணக்கூடும்.
இன்று உங்களுக்குள் இருக்கிற இந்த ஒற்றுமையை, சமுதாயத்திலும் ஒற்றுமையாக மாற்ற முடியுமேயானால், அது மிகப் பெரிய மாற்றத்தை தமிழகத்திலும், இந்தியாவிலும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
கல்லூரிச் செயலர், தாளாளர் மீனா முத்தையா: நம்முடைய செயல்களின் பிரதிபலிப்புதான் நமது வாழ்க்கை. நாம் என்ன கொடுக்கிறோமோ அவை அனைத்தையும் நமது வாழ்க்கை நமக்குக் கொடுத்துவிடும்.
எனவே, ஒருவருக்கு தன்னம்பிக்கை வேண்டுமென்றால், அதை வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கான முயற்சியை இப்போதே ஆரம்பித்துவிட வேண்டும்.
ஏனெனில், வாழ்க்கை என்பது தற்செயலாக நடக்கும் செயல் அல்ல. நம்முடைய பிரதிபலிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.
சாதனை படைக்க வேண்டும், வாழ்க்கையில் மேம்பட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் உள்ளது.இதுபோன்ற கனவுகள் மெய்ப்பட வேண்டுமானால், பொதுவுடைமை எண்ணத்தையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொள்வதோடு, திறந்த மனதுடனும் இருக்க வேண்டும். அதோடு, இலக்கின் மீது கவனத்தைச் செலுத்தி, விடா முயற்சியை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்றார். முன்னதாக, கல்லூரி முதல்வர் பி.டி. விஜயஸ்ரீ ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் கல்லூரியின் பல்வேறு துறை இயக்குநர்களாக பேராசிரியர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, உறுதிமொழியும் ஏற்றனர். இதுபோல, மாணவர் மன்றப் பொறுப்பாளர்களும் பதவியேற்று, உறுதிமொழியேற்றனர்.

No comments:

Post a Comment