Saturday, August 09, 2014

சதம் அடித்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தில் பாடம் நடக்கிறது : அச்சத்தில் பயிலும் மாணவர்கள்

பந்தலூர் அருகே மண்ணாத்தி வயல் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சிப்பெற்றும், கட்டடம் மற்றும் இட வசதியில்லாமல் மாணவர்கள் திண்டாடி வருகின்றனர்.
பந்தலூர் அருகே மண்ணாத்திவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 2011ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளிக்கு தனியாக கட்டட வசதியில்லாத நிலையில், நடுநிலைப்பள்ளி கட்டடத்தில், உயர்நிலைபள்ளி செயல்பட துவங்கியது. உயர்நிலைப்பள்ளிக்கு தனியாக 2.5 ஏக்கர் நிலம் இருந்தும், அந்த நிலம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதால், கல்வித்துறை மூலம் கட்டட வசதி ஏற்படுத்தி தர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, உயர்நிலைப்பள்ளிக்கு கட்டடம் உள்ளிட்ட தளவாட வசதிகளுக்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 198 மாணவ, மாணவியர் தமிழ் மற்றும் மலையாள வழியில் உயர்நிலை கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் கட்டடங்கள் மிகவும் பழுதடைந்து, விரிசல் ஏற்பட்டு மழை நீர் வகுப்பறைக்குள் புகுவதால், மாணவர்கள் அச்சத்துடன் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வகுப்பறை கட்டடங்கள் ஒழுகுவதால் அருகிலுள்ள மதராஸா கமிட்டியிடம் வகுப்பு நடத்த இடவசதி கோரப்பட்டுள்ளது. அவர்களும் தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளி மதரஸா கட்டடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல், ஆங்கில வழி கல்வி பிரிவும் துவக்கப்பட்டுள்ளதால், கட்டட வசதியில்லாமல் மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, பல்வேறு பிரச்னைகள் இந்த பள்ளியை சூழ்ந்திருந்த போதும், கடந்த கல்வியாண்டில் நடந்த பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. எனவே,"தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள் கல்வி பயிலும், மண்ணாத்திவயல் பள்ளிக்கு, உடனடியாக கட்டட வசதி ஏற்படுத்தி தர, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment