Monday, August 11, 2014

"குழந்தைகள் பாதுகாப்பு: பாடத் திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை"

குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு குறித்து பாடத் திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால்சிங் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தஞ்சாவூருக்கு சனிக்கிழமை மாலை வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாலியல் வல்லுறவு போன்ற கொடுங்குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு தண்டனை விதிக்கும்போது வயதை 18-லிருந்து 16 ஆகக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஒரு குழந்தை குற்றம் செய்ய காரணமாக அமைவது சமூக சூழ்நிலையே.
குற்றம் செய்த குழந்தையைத் தண்டித்து சிறைக்கு அனுப்பினால் தண்டனை காலம் முடிந்து வெளியில் வரும்போது மிகப் பெரிய குற்றவாளியாகவே சமூகத்தில் கருதப்படுவான். எனவே, அந்தக் குழந்தைக்குத் தண்டனை கொடுப்பதை விட சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முதல் கட்டமாக அனைத்துத் துறைகளுடன் கலந்தாலோசனை நடத்தி வருகிறது.
இதில், முதன்முதலாக கல்வித் துறையுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளது.
இதில் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு குறித்து பாடத் திட்டத்தில் கொண்டு வர மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் குஷால்சிங்.
அப்போது, தமிழக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரசுவதி ரங்கசாமி, உறுப்பினர்கள் ஜயந்திராணி, செல்வக்குமார், துணை இயக்குநர்கள் காளியம்மாள், தனசேகர பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நடராஜன், சைல்டு லைன் இயக்குநர் பெ. பாத்திமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

No comments:

Post a Comment