Monday, September 22, 2014

ஒரே ஆண்டில் 2 ஆயிரம் மாணவர்கள் குறைந்தனர்: மூடப்படும் அபாயத்தில் அரசுப் பள்ளிகள் - 15 பள்ளிகளில் ஒற்றை இலக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 2 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். 15 தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளது கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு அரசு தொடக்கப் பள்ளியிலும் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மற்றும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக, அந்தந்த மாவட்டக் கல்வி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தியது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருப்பதும், மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 2,039 பேர் குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பொன்னமராவதி ஒன்றியம் மாங்காலிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 9 மாணவர்களும், பூவாலக்குடியில் 4 பேர் , திருமயம் ஒன்றியம் ஆரணிப்பட்டியில் 6 பேர், கந்தர்வக்கோட்டை ஒன்றியம் ச.சோழகம்பட்டியில் 8 பேர், தெற்கு வாண்டான்விடுதியில் 9 பேர், அறந்தாங்கி ஒன்றியம் ஆலம்பட்டியில் 3 பேர், திருவரங்குளம் ஒன்றியம் கூடலூரில் 8 பேர், மணமேல்குடி ஒன்றியம் கிளாரவயலில் 4 பேர், கூம்பள்ளத்தில் 6 பேர், ஆவுடையார்கோவில் ஒன்றியம் இசைமங்கலத்தில் 7 பேர், கோதைமங்கலத்தில் 5 பேர், சிறுமருதூரில் ஒருவர், இடையூர் ஆர்.சி. பள்ளியில் 5 பேர், அரிமளம் ஒன்றியம் நல்லிக்குடியில் 8 பேர், அரசூரில் 9 பேர் என ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,003 தொடக்கப் பள்ளிகளில் 131 பள்ளிகளில் 20 -க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். கடந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 17 ஆயிரத்து 89 ஆக இருந்தது. ஆனால், நடப்பாண்டில் 15,050 ஆக சரிந்துள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசே இலவசமாகக் கொடுத்தும்கூட, மாணவர் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசின் நடவடிக்கையை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கல்வித் துறையினரும், பள்ளியை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கிராம மக்களும் உள்ளனர்.
இதுகுறித்து ஜனநாயக வாலிபர் சங்க புதுக்கோட்டை மாவட்டச் செயலர் ஏ.தர் கூறியது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு ஏராளமான உதவிகளைச் செய்கிறது. எனினும், தனியார் பள்ளி மோகத்தால், பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் தனியார் பள்ளிகளிலேயே குழந்தைகளைச் சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலானோரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளிலேயே பயில்கின்றனர்.
திருவரங்குளம் ஒன்றியத்தில் 4 நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமலேயே உள்ளது. அங்குள்ள ஆசிரியர்களே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால், ஏழைக் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிகளின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட பெற்றோர்-ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக் குழு, பள்ளி மேம்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமா இடமாக பள்ளியைக் கருதுவதால், பள்ளியின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஒரே ஆண்டில் 2 ஆயிரம் மாணவர்கள் குறைந்திருப்பது மிகவும் ஆபத்தானது. இதேநிலை நீடித்தால், குறைவான எண்ணிக்கையில் உள்ள அரசுப் பள்ளிகளை மூட அரசு திட்டமிடும். இதனால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவர். எனவே, இந்தப் பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக முதல்வர் முன்வர வேண்டும், என்றார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தரப்பில் கூறுகையில் “அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒற்றை இலக்க மாணவர்களைக் கொண்டு செயல்படும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிரமாகப் போராடி வருகிறோம்” என்றனர்.

No comments:

Post a Comment