Saturday, September 13, 2014

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் அட்லஸ் புத்தகங்கள்

பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.நிகழ் கல்வியாண்டில் (2014-15) அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக அட்லஸ் புத்தகங்களை ஜூலை மாதத்துக்குள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டாலும், மத்திய அரசின் அரசிதழில் வெளியாகாமல் இருந்தது. இதன் காரணமாக, இரு மாநிலங்களுக்கிடையே அதிகாரப்பூர்வமான எல்லை வரையறை செய்யப்படாமல் இருந்தது. அரசிதழில் இந்த மசோதா வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது இந்திய வரைபடங்களுக்கு அனுமதி கோரி தலைமை நில அளவையாளர் அலுவலகத்தில் பதிப்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த அனுமதி கிடைத்ததும் அட்லஸ் புத்தகங்கள் உடனடியாக அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் அட்லஸ் புத்தகம் வழங்கப்படவில்லை. இப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களுக்கும் இந்த ஆண்டு அட்லஸ் புத்தகங்கள் வழங்கப்படும்.
இலவசக் காலணிகள், புத்தகப் பைகள் எப்போது?: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு ஒரு ஜோடி இலவசக் காலணிகள், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1 கோடி மாணவர்களுக்கு இலவசப் புத்தகப் பைகள் வழங்கப்பட உள்ளன.
இதில் முதல் கட்டமாக, காலணிகளும், புத்தகப் பைகளும் வரத் தொடங்கியுள்ளன. இந்தப் பொருள்கள் மாவட்டங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு, இவற்றின் தரம் பரிசோதிக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு கடுமையான தரப் பரிசோதனை நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்குள் மாணவர்களுக்கு காலணிகளும், புத்தகப் பைகளும் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment