Friday, September 05, 2014

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும்: வலுத்துவரும் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் தமிழக
அரசு கொண்டு வந்துள்ள வெயிட்டேஜ் எனப்படும்
தகுதிகாண் முறையை உடனடியாக ரத்து செய்ய
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித்
தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு, அதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த
ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வினை,
இடைநிலை ஆசிரியர் படிப்பு மற்றும்
பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த சுமார் 10
லட்சம் பேர் எழுதினர்.
10,782 இடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில்,
மொத்தம் 72 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தகுதிகாண்
மதிப்பெண் முறை என்ற புதிய முறையை திடீரென
கொண்டுவந்தது. இதன் காரணமாக,
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்
பயிற்சி முடித்தவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்
எழுந்தது. இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்
தகுதி காண் ஆணை எண் 71-ஐ நீக்கக் கோரி, கடந்த
பத்து நாட்களாக பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர். வெயிட்டேஜ் முறையை நீக்க
வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பாமக
நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த்
உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்
ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக,
மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
ஆசிரியர்களை அழைத்துப் பேசி, இந்த
பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என
கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment