Sunday, September 07, 2014

தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை

நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை. இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், மாணவர் சேர்வதற்கு, வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான எண்ணிக்கையில், அரசு பள்ளிகள், தரம் உயர்த்தப்படுகின்றன. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் அறிவிப்பை, கடந்த, ஜூலை, 30ம் தேதி, சட்டசபையில், முதல்வர் அறிவித்தார்.அதன் விவரம்:25 மாவட்டங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள, 128 குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, தலா ஒரு தொடக்கப்பள்ளி வீதம், 128 புதிய, தொடக்கப்பள்ளி துவங்கப்படும். இந்த பள்ளிகளில், நவீன சமையல் அறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள், கழிப்பறைகள் ஆகியவை ஏற்படுத்தி தரப்படும்.நடப்பு கல்வி ஆண்டில், 19 மாவட்டங்களில், 42 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.50 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்துஇருந்தார்.கூடுதல் ஆசிரியர் : தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, கூடுதல் ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற, தேவையான நிதி விவரங்களையும், முதல்வர் அறிவித்திருந்தார். அறிவிப்பு வெளியாகி, ஒன்றரை மாதம் முடிய உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசமும், ஆகஸ்ட் இறுதியுடன் முடிந்துவிட்டது. இதுவரை, தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியல் வெளியாகவில்லை. மாவட்ட வாரியாக, தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் குறித்த பட்டியலை, பள்ளி கல்வித் துறை பெற்று, முதல்வரின் அனுமதிக்காக அனுப்பி உள்ளது. எப்போது, பட்டியல் வெளியாகும் என, தெரியவில்லை.இனிமேல் பட்டியல் வெளியானாலும், புதிய மாணவர்கள் சேர வழியில்லை.இது குறித்து, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:மாணவர் சேர்க்கை : அனைத்து வகை பள்ளிகளிலும், ஜூன் முதல், ஆகஸ்ட் இறுதி வரை, மூன்று மாதம் மட்டுமே, மாணவர் சேர்க்கை நடத்தலாம். செப்டம்பரில் நடத்தக் கூடாது.தரம் உயர்த்தப்படும் பள்ளி பட்டியல், ஆகஸ்ட்டில் வெளியாகி இருந்தால், புதிய மாணவர் சேர, வாய்ப்பு கிட்டியிருக்கும். மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், இனி, பட்டியல் வெளியானாலும், அதனால், பலன் இல்லை. ஆனாலும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு மாற்றி, இந்த ஆண்டு, அதிகாரிகள் சமாளிப்பர். இதனால், மாணவர்களுக்குத் தான் சிரமம்.இவ்வாறு, சாமி சத்தியமூர்த்தி கூறினார்.

No comments:

Post a Comment