Tuesday, October 14, 2014

மாணவருக்கான சிறப்பு கட்டணம் உடனே வழங்க வலியுறுத்தல்

'பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டணத்தை அரசு உடனே வழங்க
வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கையின் போது சிறப்பு கட்டணம்
வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக
இத்தொகையை அரசே செலுத்தி வருகிறது.
நடுநிலை மாணவருக்கு ரூ.29, உயர்நிலையில் ரூ.41,
மேல்நிலையில் அறிவியல் பிரிவுக்கு ரூ.93,
கலைப்பிரிவுக்கு ரூ.80, தொழிற்பிரிவுக்கு ரூ.65
வசூலிக்கப்படுகிறது. இத்தொகையில்தான் பள்ளிகளில்
மாணவர்களுக்கு தேவையான பதிவேடுகள், நூலகம்,
சாரணர், மருத்துவம், விளையாட்டு, பதிவேடு, சாக்பீஸ்,
எழுதுபொருட்கள், ஆய்வுக் கூடவசதிகள்
செய்யப்படுகின்றன. இந்த ஆண்டில் பள்ளி திறந்து 5
மாதங்களாகியும் இதுவரை இத்தொகை வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஆக.,1ல் மாணவர்கள்
எண்ணிக்கை அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.
அப்படி இருந்தும் தாமதமாவதால், மேற்கண்ட
செலவுகளை தலைமை ஆசிரியர்களே கையில் இருந்து செலவிடும்
நிலை உள்ளது.
கள்ளர் பள்ளிகளில் கேட்கவே வேண்டியதில்லை. கடந்த 6
ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொகை வழங்கப்படவில்லை.
எனவே பள்ளியை நிர்வகிக்க ஆசிரியர்கள்
சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
சங்க மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி,
மதுரை செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:
மாணவர்களுக்கான செலவை தலைமை ஆசிரியர்கள்
ஏற்கின்றனர். இவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டால்
அத்தொகையை மீண்டும் கேட்டுப் பெறுவது சிரமம்.
சிறப்பு கட்டண நிதி உடனே கிடைத்தால் மாணவருக்கான
வசதிகளை தாமதமின்றி செய்து தரமுடியும்.
இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment