Monday, November 10, 2014

"தொடர்அங்கீகாரம் தாமதம்: 2 ஆயிரம் பள்ளிகள் தவிப்பு"

தமிழகத்தில் தொடர் அங்கீகாரம் பெற விண்ணப்பித்தும் தாமதமாகி வருவதால் 2 ஆயிரம் பள்ளிகள் தவித்து வருகின்றன என்றும்,

இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளின்
சங்க மாநில பொதுச் செயலர்
கே.ஆர்.நந்தகுமார் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம்
அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: நர்சரி,
பிரைமரி, மெட்ரிகுலேசன்
பள்ளிகளுக்கு இது இருண்ட காலம்போல உள்ளது.
அனுமதி கேட்டு விண்ணப்பித்த 4 ஆயிரம்
பேருக்கு அனுமதி வழங்கவும்,
ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றுள்ள
2 ஆயிரம் பள்ளிகள்
தொடர்ந்து செயல்படுவதற்கான
அனுமதி வழங்கவும் தாமதம்
செய்யப்பட்டு வருகிறது. இதனால்
பள்ளி நிர்வாகமும் மாணவர்களும்
தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சுகாதாரச்சான்று, கட்டட உரிமைச் சான்று,
தீயணைப்பு நிலையச் சான்று, உள்ளூர் திட்டக்குழும
அனுமதி போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பணம்
கேட்கும் நிலை அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மெட்ரிக்
பள்ளிகளின் இயக்குநரகத்திலும் கல்வித்துறைச்
செயலரிடமும் முறையிட்டுள்ளோம்.
எனினும், அதிகாரிகளின் ஊழலை எதிர்த்து குரல்
கொடுக்கும் வகையில் வருகிற 24-ஆம்
தேதி எங்களது சங்கம் சார்பில் கடலூரில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதே நாளில்
பல்வேறு மாவட்டங்களிலும்
கோரிக்கைகளை விளக்கி ஆட்சியர்களிடம் மனுக்கள்
அளிக்கப்படவுள்ளது.
இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ்
பிரைமரி, நர்சரி பள்ளிகளில்
ஏற்கெனவே சேர்க்கப்பட்ட
மாணவர்களுக்கான கல்விக்கட்டணம்
வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிகழாண்டில் 98
ஆயிரம் மாணவர்களைச் சேர்த்துள்ளோம். அனைத்துக்
கட்டணங்களையும் சேர்த்து செப்டம்பருக்குள்
தருவதாகக் கூறினர்.
ஆனால், இதுவரை தரவில்லை. இதேபோல மெட்ரிக்
பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர்
விருது வழங்கப்படாத நிலையும் வருத்தமளிக்கிறது.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ்
பாடப்புத்தகங்களை அரசிடம் வாங்கும்போது 5
சதவீத தள்ளுபடி வழங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் முறைகேடுகள்
உள்ளன.
ஆகவே, புத்தக
உரிமையை தனியாருக்கு விடுவதற்கு அரசு பரிசீலிக்க
வேண்டும் என்றார் அவர்.
சங்கத்தின் மாநில கல்வி ஆலோசகர் மரியசூசை,
மாநில அமைப்புச் செயலர் கல்யாணசுந்தரம்
உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment