Sunday, December 28, 2014

நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் புத்தகங்கள்: கேரள அரசு அறிவிப்பு

உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்’ நடைமுறையில் உள்ளது.

காகிதத்தில் அச்சிடப்பட்ட பாடநூல்களுக்கும், கரும்பலகைகளுக்கும் மாற்றாக வகுப்பறைகளில் பெரிய திரைகள் பொருத்தப்பட்டு ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கணினியை இயக்கி, இன்று எந்த புத்தகத்தில் இருந்து எத்தனையாவது பாடத்தை நடத்த வேண்டும்? என்பதை வகுப்பாசிரியர் தேர்வு செய்வார்.
பின்னர், திரையில் தோன்றும் காட்சிகளின் மூலம் அந்தப் பாடம் தொடர்பான விரிவுரை, பட விளக்கம், அத்துறையைச்  சார்ந்த வல்லுனர்களின் கருத்து மற்றும் உபரி தகவல்கள் ஆகியவற்றை மாணவ-மாணவிகள் பயின்றுக் கொள்ளலாம்.
இவ்வகையிலான டிஜிட்டல் முறை பாடப் புத்தகங்கள் இந்தியாவில் உள்ள சில பள்ளிகளில் ’ஸ்மார்ட் கிளாஸ்’ என்ற பெயரில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், முழுமையான வகையில் நாடு தழுவிய அளவிலோ, மாநிலம் மற்றும் மாவட்டம் தழுவிய அளவிலோ இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்’ அறிமுகப்படுத்தப்படும். இதற்காக தற்போது பயன்பாட்டில் உள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு இதற்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன என கேரள அரசு அறிவித்துள்ளது
”IT@School” என இந்த திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த (ஜனவரி) மாதத்தில் இருந்து இவ்வகையிலான ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்’ நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 37 லட்சம் மாணவர்களும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பயனடைவார்கள் என கேரள அரசின் கல்வித்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவ மாணவிகளும் வீட்டில் இருந்தபடியே “டேப்லெட்” மூலம் ”IT@School” இணையத்திற்கு சென்று இந்த பாடங்களை படித்துக் கொள்ளலாம்.
மாநில அரசின் பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால், அவற்றிற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பகிர்ந்துக் கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment