Thursday, February 19, 2015

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம்

முசிறி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனால் பெற்றோர்களும் மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 6ஆம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது.
அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பழனிவேல் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மீது திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பல புகார் மனுக்கள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
மேலும் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் வரப்பெற்றது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.
அவரது உத்தரவுப்படி முசிறி மாவட்ட கல்வி அலுவலர் தட்சிணாமூர்த்தி மாணவிகளை பள்ளி மைதானத்தில் நிறுத்தி ஆசிரியர்கள் மீதான புகார் குறித்து பொது விசாரணை செய்துள்ளார். மாணவிகளை கூட்டமாக நிறுத்தி மாவட்ட கல்வி அலுவலர் தட்சிணாமூர்த்தி விசாரணை செய்ததால் அச்சம் அடைந்த மாணவிகள் ஆசிரியர்கள் குறித்து விளக்கம் தர தயங்கியதாக தெரிகிறது. அதனால் மாவட்டக் கல்வி அலுவலர் மாணவிகள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் எதுவும் அளிக்கவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் இரண்டு ஆசிரியர்கள் மீது மீண்டும் முறையான விசாரணை நடத்தவேண்டும் என கோரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதன் காரணமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி திருச்சி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வசந்தா என்பவரை முசிறி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வசந்தா முசிறி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளிடம் தனி அறையில் தனித்தனியாக விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் ஒப்படைத்துள்ளார். அந்த அறிக்கையின் பேரில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை திருச்சி அலுவலத்திற்கு நேரில் வரவழைத்து தனித்தனியே விசாரணை செய்து எழுத்து பூர்வமாக விளக்கம் பெற்றுள்ளார்.
மேற்கண்ட விளக்கத்தின் பேரில் ஆசிரியர்கள் பழனிவேல் மற்றும் செந்தில்குமார் செய்த தவறுகள் உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி பள்ளி ஆசிரியர்கள் பழனிவேல் மற்றும் செந்தில்குமார் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்களும், மாணவிகளும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment