Wednesday, February 04, 2015

கல்வித்துறையில் மாற்றம் எளிதான பணி அல்ல!

அதிகம் படித்த அறிஞர்கள் உள்ள
நகரங்களிலும், அதேசமயம்
அவ்வளவு முன்னேற்றம் இல்லாத
பஞ்சாயத்துக்களிலும், கல்வியில்
ஒரே மாதிரி மாற்றம் காண மத்திய
அரசு விரும்புகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
ஸ்மிருதி இரானி, இந்தியக்
கல்வியானது, சர்வதேச
அளவிற்கு மேம்படும் வகையில் அமைக்க
முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
10ம் வகுப்பு, அதற்கு பின் பிளஸ் 2
வரை இரு ஆண்டுகள், அதற்குப் பின்
பட்டப் படிப்பு, மூன்று ஆண்டுகள் என்ற
நடைமுறை, 1968ல் துவங்கப்பட்டது.
அப்போது இந்திரா பிரதமர். அதற்குப்
பின், 1986ல், ராஜிவ் சில
மாற்றங்களை கல்வித் துறையில்
அமல்படுத்தினார். கடந்த, 10 ஆண்டுகளில்
கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம்
வரவில்லை என்பதற்கு அடையாளமாக,
உலகம் முழுவதும் உள்ள, 200 முதலிட
பல்கலைக் கழகங்களில் நாம்
ஒரு இடத்தைக் கூட
பெற்றிருக்கவில்லை. மேலும், 5ம்
வகுப்பு மாணவருக்கு, இரண்டாம்
வகுப்பு மொழிப்பாட நூலை, சரளமாக
வாசிக்க
தெரியவில்லை என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன. அரசியல் தலைவர்கள்,
கல்வியாளர்கள், தலைசிறந்த
நிர்வாகிகள், டிஜிட்டல் தகவல்
புரட்சியில் தொடர்புடையவர்கள்,
இளவயதில் ஒழுக்கம் ஏற்பட வழிகாட்டும்
நெறியாளர்கள் ஆகிய அனைவரும்
சேர்ந்து, உலக
நடைமுறைகளை ஆய்வு செய்து,
இதற்கான புதிய வழிகாண வேண்டும்.
இக்கருத்து தற்போது மேலோங்கி
வருகிறது. அதற்கு, அன்னியர்
ஆட்சியின் பின்னணியில் எழுதப்பட்ட
இந்தியாவின் வரலாற்றை உணர்ந்து,
அக்காலத்தையும், ஆதாரங்களுடன்
கூடிய புதிய வரலாற்றுத்
தகவல்களையும், இந்திய
ஒற்றுமையை பேணும் வழிகளையும்
கல்வியில் இணைப்பது ஒரு அம்சம்.
அதிநவீன விஞ்ஞான
வளர்ச்சியை எளிதாக உணர்த்தும்
தகுதி பெற்ற
ஆசிரியர்களை உருவாக்கும் திட்டம்,
அதற்கான அடிப்படை வசதிகள் என்று,
பல்வேறு அம்சங்களை ஆராய்வது முதல்
கட்டம்.
இன்றுள்ள நிலையில் பொறியியல்
பட்டதாரிக்கு மட்டும் அல்ல;
பட்டப்படிப்பு படித்த பல
இளைஞர்களுக்கும்
வேலை வாய்ப்பு இல்லை.
அவர்களுக்கு திறனறி பயிற்சித்
திட்டத்தை, மத்திய அரசு தர
முன்வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால்,
அறிவியல், கலை பட்டப்படிப்பு படித்த
மூன்றில் ஒருவருக்கு, அவர் 29
வயதை எட்டியபோதும்
வேலைவாய்ப்பு இல்லை. இத்தகவலை,
2013ல் எடுத்த புள்ளி விவரம்
தெரிவிக்கிறது. பிளஸ் 2
படிப்பை முடித்ததும், மாணவனோ,
மாணவியோ தங்களது எதிர்கால
பணிகுறித்து முடிவு எடுக்கும்
சூழ்நிலையை, கல்வி நிலையங்கள்
தரவேண்டும் என்ற
கருத்து உருவாகி வருகிறது. இதன்
அடிப்படையில் நாடு முழுவதும்
ஆயிரம் கல்லூரிகளில், தொழில் சார்ந்த
கல்வி, அதற்கான பயிற்சி தர, திட்டங்கள்
வர உள்ளன. தவிரவும் மொழி,
சமூகவியல் பட்டப்படிப்பில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எளிய
முறையில் வேலைவாய்ப்பு தர
சுற்றுலா சம்பந்தமான
படிப்பு அல்லது பாரம்பரிய சின்னம்
உடைய பகுதிகளில்
வேலைவாய்ப்பு இருந்தால், அவர்கள்
எளிதாக வருமானம் ஈட்டலாம் என்ற
கருத்து அரசிடம் உள்ளது.
இவற்றை உருவாக்க
குறைந்தது இன்னும்
மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்.
அப்போது மாநில அரசுகள்
ஒத்துழைப்பை மத்திய
அரசு திரட்டுவதுடன், அதற்கான
நிதி ஆதாரங்களை தேவைக்கு ஏற்ப
பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஆனால்,
பொருளாதார
வளர்ச்சி என்பது கல்வித்துறையில்
ஏற்படும் வளர்ச்சியுடன்
ஒருங்கிணைந்தது என்பதால், இம்
முயற்சியை மத்திய
அரசு இப்போது மேற்கொள்வது பயன்
தரலாம்.

No comments:

Post a Comment