Sunday, March 22, 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28- இல் பணி நியமன கலந்தாய்வு; மூன்றே மாதங்களில் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு
செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி
பணி நியமன கலந்தாய்வு நடைபெற
உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
காலியாக இருந்த முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு
போட்டித் தேர்வு மூலம் தேர்வு
செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி
நியமன கலந்தாய்வு இணையதளம்
மூலமாக வருகிற 28-ஆம் தேதி
நடைபெறுகிறது.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் அலுவலகங்களில் இந்தக்
கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன
ஆணைகள் வழங்கப்பட
உள்ளன. முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான
கலந்தாய்வு வருடவாரியாக ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள
வரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.
முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த
மாவட்டங்களிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான
கலந்தாய்வும், பின்னர் வேறு
மாவட்டங்களில் பணிபுரிய
விருப்பமுள்ளவர்களுக்கான
கலந்தாய்வும் நடத்தப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு
செய்யப்பட்ட பணி நாடுநர்கள்
அனைவரும் தங்களது முகவரியில்
குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள
முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் நடைபெறும்
கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான
சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள்
உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு
வர வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.
மூன்றே மாதங்களில் பணி நியமனம்:
முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு
ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1.90
லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு
முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி
வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல்
பிப்ரவரி 26-ஆம் தேதி
வெளியிடப்பட்டது. வருகிற 28-ஆம் தேதி
பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற
உள்ளது.
தேர்வு நடைபெற்ற பிறகு
முடிவுகளை வெளியிடவும், பணி
நியமனத்துக்கும் குறைந்தது 6
மாதங்கள் ஆகும். ஆனால், 1,789
ஆசிரியர்கள் 3 மாதங்களில் பணி
நியமனம் செய்யப்படுகின்றனர்.

No comments:

Post a Comment