Monday, May 18, 2015

பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க 'சிடி' ரெடி! கல்வித்துறை யுக்தி கை கொடுக்குமா?

அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய, 'சிடி' போன்ற, 'மினிமம் லெவல் மெட்டீரியல்' மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது கல்வி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஆய்வு, விலையில்லா பொருட்கள் வினியோகம், நிலுவை வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா தலைமையில் நடந்தது. இதில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். பொதுவாக, சில தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் நோக்கில், 10ம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், 12ம் வகுப்பு பாடத்தை, 11ம் வகுப்பு முதலும் நடத்த துவங்கிவிடுவர். ஆனால், அரசு பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு, முழுமையான பாடங்கள் நடத்தி பயிற்சிகள் வழங்கி வருகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவித்து தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும், காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நிரப்புதல், பயிற்சிகளின் தன்மையை மாற்றுதல், பின்தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடாமல், கல்வித்தரத்தை குறைக்கும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு, அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதாவது, பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுறுத்தலின் படி அனைத்து பாடங்களிலும் முக்கிய பாடங்கள், முக்கிய கேள்விகள் அடங்கிய குறுந்தகடு (சிடி) தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த, குறுந்தகடுகளை மட்டும் பயன்படுத்தி, கல்வியாண்டு துவக்கம் முதலே, அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கல்வித்துறை இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், ''பொதுவாக, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, மிகவும் பின்தங்கிய மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் எதிர்காலம் கருதி, 'மினிமம் லெவல் மெட்டீரியல்' பயன்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால், இக்கல்வியாண்டில், நன்கு படிக்கும், படிக்காத அனைத்து மாணவர்களுக்கும் ஆரம்பம் முதலே மினிமம் லெவல் மெட்டீரியல் பயன்படுத்தி பயிற்சி அளிக்க கூறுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற உத்தரவுகளால், கல்வித்தரம் பாழாகிவிடும்,'' என்றார்

No comments:

Post a Comment