Wednesday, May 06, 2015

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்

பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில்
பணியாற்ற வேண்டும் என்றால்
வேப்பங்காயை சாப்பிடுவது போல
கசப்பான ஒன்றாகும்.
இதனை தவிர்ப்பதகாக
அவர்கள், உடல்நிலை சரியில்லை எனவும்,
குடும்ப சூழ்நிலையை காரணம்
காட்டியும் நகர்ப்புறங்களில் பணியாற்ற
வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வது
வாடிக்கையாக அரங்கேறி வருகிறது.
அதிலும் சிலர், அரசியல்வாதிகளின்
ஆதரவுடன் கிராமப்புறங்களில் பணியாற்ற
செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.
இனிமேல், இதுபோன்று காரணங்களை
கூறி கிராமப்புற பள்ளிகளில்
ஆசிரியர்கள் பணியாற்றுவதை தவிர்க்க
முடியாத வகையில் கர்நாடக அரசு புதிய
சட்டம் கொண்டுவர முடிவு செய்து
உள்ளது.
கிராமப்புற ஆசிரியர்களின் அவலநிலை
கர்நாடகத்தில் சுமார் 54 ஆயிரம் அரசு
பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் 3
லட்சத்துக்கு அதிகமான ஆசிரியர்கள்
பணியாற்றி வருகிறார்கள். இந்த
ஆசிரியர்களில் 15 சதவீதம் பேர்,
கிராமப்புறங்களில் பணியாற்றியது
கிடையாது. மேலும் 2007-ம் ஆண்டுக்கு
முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்
நகர்ப்புறங்களை விட்டு
கிராமப்புறங்களில் பணியாற்றவில்லை.
இதற்காக அவர்கள் பல்வேறு காரணங்களை
கூறி பணிமாற்றத்தை தவிர்த்து
தங்களுக்கு ஏதுவாக உள்ள நகரப்பகுதியில்
பணியாற்றி வருகிறார்கள். இதனால்
கிராமப்புறங்களில் பணியாற்றி வரும்
ஆசிரியர்கள், நகர்ப்புறங்களில் பணியாற்ற
முடியாத சூழல் உள்ளது.
கிராமப்புறங்களில் பணியாற்றி வரும்
ஆசிரியர்கள் அந்த பகுதியிலேயே ஓய்வு
பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அவர்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள அரசு
பள்ளிகளில் பணியாற்றுவது என்பது
எட்டாக்கனியாகவே உள்ளது. இதுதவிர,
கிராமப்புறங்களில் பணியாற்ற யாருக்கும்
விருப்பம் இல்லாததால் அங்கு ஆசிரியர்
பற்றாக்குறை அதிகளவு உள்ளது.
ஆசிரியர்களின் சுயநலம்
கர்நாடகத்தில் வடகர்நாடகம், ஐதராபாத்
கர்நாடகம், கடலோர கர்நாடகம் பகுதியில்
உள்ள கிராமப்புற பள்ளிகளில் தற்போது
ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவு
உள்ளது. இதனால் அந்த பகுதி மாணவ-
மாணவிகள் உயர்தர கல்வி கிடைப்பதில்
வஞ்சிக்கப்படுகிறார்கள். இது அரசு
ஆசிரியர்கள் கிராமப்புறங்களில்
பணியாற்றுவதற்கு விருப்பமின்மையே
காரணம் ஆகும். ஆசிரியர் பணியை
அனைவரும் சேவை மனப்பான்மையுடன்
செய்ய வேண்டும். ஆனால், நகர்ப்புறங்களில்
பணியாற்றும் ஆசிரியர்களின்
சுயநலத்தால், அந்த பகுதி மாணவ-
மாணவிகள் தரமான கல்வி கிடைக்காமல்
பள்ளிப் படிப்பை பாதியிலேயே துறக்க
நேரிடுகிறது.
மாநில அரசு கிராமப்புறங்களில் டாக்டர்கள்
கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்ற
சட்டத்தை கொண்டு வந்ததை போலவே,
தற்போது கிராமப்புற பள்ளிகளில்
ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் கட்டாயம்
பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை
கொண்டுவர உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளது.
தீவிர பரிசீலனை
கர்நாடகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள்
அனைவருக்கும் சரிசமமான உரிமை
கிடைக்க, கிராமப்புறங்களில்
பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு
கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை
அறிந்த கர்நாடக கல்வித் துறை மந்திரி
கிம்மனே ரத்னாகர், கல்வி அதிகாரிகள்,
கல்வி பிரதிநிதிகளுடன் தீவிர பரிசீலனை
நடத்தி வருகிறார். இதனால் கூடிய
விரைவில் அனைத்து ஆசிரியர்களும்
கிராமப்புற பள்ளிகளில் 5 ஆண்டுகள்
கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற சட்டம்
அமல்படுத்தப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அரசு இந்த சட்டத்தை
கொண்டுவருவதன் மூலம்,
கிராமப்புறங்களில் ஆசிரியர்கள்
பற்றாக்குறை தீர்வதுடன், கிராமப்புற
மாணவ- மாணவிகளுக்கு தரமாக கல்வி
கிடைக்கும். இதனால் கிராமப்புற மக்களும்,
மாணவ-மாணவிகளும் இந்த சட்டத்தை
எதிர்நோக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment