Saturday, May 09, 2015

பள்ளியும் கல்வியும்! தினமணி தலையங்கம்

பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமன்றி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தினமணியின் வாழ்த்துகள்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,39,291 மாணவர்களில் 7,60,569 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 60%க்கு மேலாக மதிப்பெண் பெற்றவர்கள் 5,03,318 பேர். சென்ற ஆண்டைக் காட்டிலும் 17,620 மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு எழுதினார்கள். சென்ற ஆண்டு பெற்ற அதே 90.6% தேர்ச்சியே இந்த ஆண்டிலும்! தேர்வு எழுதியவர்களிலும் மாணவிகளே அதிகம். தேர்ச்சி பெற்றவர்களிலும் (93.4%), சிறப்பிடம் பெற்றவர்களிலும்கூட மாணவிகளே அதிகம். மாணவர்கள் தேர்ச்சி 87.5%தான்.
தமிழ்நாட்டின் அனைத்து கல்வி மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் மொத்தம் 150 பேர். இவர்களில் மாணவிகள் 105. மாணவர்கள் 45. (பொதுப் பிரிவினர் 29, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 21, பிற்படுத்தப்பட்டோர் 94, தலித்துகள் 6). இந்த மாணவர்கள் அனைவருமே தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியரில் ஏன் ஒருவர்கூட மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க முடியவில்லை?
அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு இல்லை என்று ஒரே வரியில் கூறிவிட முடியாது. எல்லா ஆசிரியர்களையும் அப்படி வகைப்படுத்துவது சரியல்ல. அர்ப்பணிப்பு உணர்வு உடையவர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை, செயல்பட்டாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதும்கூட உண்மை.
அரசுப் பள்ளிகள் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் மூலம் 5,24,332 பேர் தேர்வு எழுதினர். தனியார் பள்ளிகள் மூலம் 2,39,489 பேர் தேர்வு எழுதினர். அதாவது, சரிபாதி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி 84%, நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி 93.4%, தனியார் பள்ளிகளில் 98%. தேர்ச்சியைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகள் பின்தங்கவில்லை என்பது நிச்சயம். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போடும் உணர்வும், ஈடுபாடும் இல்லை.
தனியார் பள்ளியில் தேர்ச்சி விகிதம் 99%க்கு கீழாகச் சென்றாலும் மாணவர் சேர்க்கை குறையத் தொடங்கிவிடும். பள்ளியின் பெயரை நிலைநிறுத்தினால்தான் தொடர்ந்து கடைவிரிக்க முடியும். ஆகவே, அவர்கள் மாணவர்களை அவர்களது திறனுக்கு ஏற்ப பிரிக்கிறார்கள். எந்த மாணவர்களுக்கு 90%க்கு அதிகமாக மதிப்பெண் பெறும் திறன் இருக்கிறதோ அவர்களை மட்டும் பிரித்து தனிக் குழுவாக மாலை வகுப்பு நடத்தி, அவர்களுக்குப் பள்ளியிலேயே இரவு உணவும்கூட அளித்து தனி வாகனத்தில் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இந்தத் தனிக் குழுவுக்கான ஆசிரிய, ஆசிரியைகளும் உடனிருந்து மாணவர்களுக்கு உதவிட வேண்டும்.
இதை வணிகம் என்றாலும், பிராய்லர் கோழி முறை என்றாலும், வேறு என்னவென்று அழைத்தாலும் இந்தத் தனிக் கவனம்தான் தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்கிறது.
மாவட்டம்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறந்த மாணவர்கள் சிலரைத் தேர்வு செய்து தனிக் கவனம் செலுத்தும் "டாப்பர்ஸ் புரோகிராம்' திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்திருந்த போதிலும், முதல் மூன்று இடங்களில் வர முடியவில்லை. அதற்குக் காரணம், பெரும்பாலான பள்ளிகளில் மாலை வேளையில் ஒரு நிமிடம்கூடக் கூடுதலாக பள்ளியில் ஆசிரியர்கள் இருப்பதில்லை. வெகுசில பள்ளிகளில் மட்டுமே, சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். கூடுதலாக நேரம் செலவிடுகிறார்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு சம்பளம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அர்ப்பணிப்பு உணர்வு ஏன் இல்லை? அவர்களது குழந்தைகள் ஒரு தனியார் பள்ளியில் சிறப்பாகப் படிக்கிறார்கள் என்பதுதான் காரணம்.
இதில் அரசும் ஒரு தவறைச் செய்கிறது. தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்துப் பயின்ற மாணவர்களை மட்டுமே தரவரிசைப்படுத்துகிறோம் என்று அரசு சொல்கிறது. ஆனால், மாநில, மாவட்ட அளவில் முதன்மை பெறும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளி மாணவர்களே. இந்த மாணவர்கள் தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்திருந்தாலும், மற்ற பாடங்களை இவர்கள் ஆங்கில வழியில் படித்து ஆங்கிலத்தில் தேர்வு எழுதியவர்கள். ஆனால், இவர்கள்தான் மாநில, மாவட்ட அளவில் அரசின் ரொக்கப் பரிசை அள்ளிச் செல்கிறார்கள்.
மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கே பரிசும், பாராட்டும் கிடைக்கும் சூழல் இருக்கும்போது எந்தப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விழைவார்கள்? அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்து எழுதும் மாணவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டால்தானே தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்பதாக அமையும்?
அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்டாலொழிய அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் தரம் உயராது!

No comments:

Post a Comment