Thursday, June 25, 2015

வட்டார வளமைய மேற்பார்வையாளரை, உள்ளே வைத்து பூட்டிய விவகாரம்! மன்னிப்பு கேட்ட ACEO!

வட்டார வளமைய மேற்பார்வையாளரை, உள்ளே வைத்து பூட்டிய விவகாரத்தில், இப்பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட தலைமையாசியர் மீது, கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், ஆசிரியர் பயிற்றுனர்கள், கடும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை ஊராட்சி துவக்கப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அப்பள்ளியில், கோபாலகிருஷ்ணன் என்பவர் தலைமையாசிரியாக பணியாற்றி வருகிறார். மேலும், இரண்டு உதவி ஆசிரியர்களும் உள்ளனர்.கடந்த, 15ம் தேதி, கபிலர்மலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார், இப்பள்ளியில், அரசு வழங்கும் பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் மற்றும், மாணவர்களிடம் கற்றல், கற்பித்தல் செயல்பாடு பற்றி, ஆய்வு செய்வதற்காக, கிராமக்கல்விக்குழு கணக்காளருடன் சென்றார்.அன்றைய தினம், ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால், தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என, இரண்டு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நேராக, வகுப்பறைக்கு சென்று மாணவர்களின் "ஹோம் ஒர்க்' நோட்டு புத்தகத்தை பார்வையிட்டுள்ளார்.ஆனால், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை மாணவர்கள், ஒரே வகுப்பறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன், ஆசிரியரும் அங்கு இல்லை. அந்த ஆசிரியருடன், தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.அங்கு சென்ற கணக்காளர், வரவு-செலவு கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மேற்பார்வையாளர், மாணவரை அனுப்பி, ஆசிரியரை அழைத்துவரச் சொன்னார். ஆனால், தலைமையாசிரியரோ, "ஆசிரியரை போக வேண்டாம்' என கூறித் தடுத்துள்ளார்.அதைதொடர்ந்து, மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், நேரில் வந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம், வராதது குறித்து காரணம் கேட்டுள்ளார். அப்போது, தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், "வரவில்லைன்னா என்ன செய்துவிடுவாய், மெமோ கொடுத்து விடுவாயா' என, கடுப்படித்துள்ளார்.மேலும்,
"யாரைக்கேட்டு உள்ளே வந்தாய்' எனக்கேட்டு, பள்ளி கேட்டையும் பூட்டி உள்ளார். இது குறித்து, ஏ.இ.இ.ஓ., அருள்புனிதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின், "கேட்' திறக்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளரை பள்ளியில் வைத்து பூட்டிய சம்பவம், ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபுவிடம் இப்பிரச்னை குறித்து கேட்டதற்கு, ""இது குறித்து எனக்குத் தெரியாது; என் கவனத்துக்கு யாரும் கொண்டு வரவில்லை,'' என்றார்.இதற்கிடையே, கூடுதல் சி.இ.ஓ., தாமரையும், விசாரணைக்கு சென்று, தவறு செய்த தலைமையாசிரிடம், "உங்கள் மகன் போல் நினைத்து, மேற்பார்வையாளர் சுரேஷ்குமாரை, மன்னித்து விடுங்கள்' என, தெரிவித்துள்ளார்.தவறு செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சென்ற கூடுதல் சி.இ.ஓ., அவரிடம் சரண்டர் அடைந்து, மன்னிப்பு கேட்டது, ஆசிரியர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது."பள்ளி மாணவர்கள் வெளியே செல்வதால், "கேட்'டை பூட்டச் சொன்னேன். அவர்கள், தவறாக புரிந்து கொண்டனர்' என, பள்ளி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணந் என்றார்.

No comments:

Post a Comment