Thursday, June 18, 2015

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அங்கீகாரம்
ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியுமான ஆர்.வேலு, ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1973-ன் கீழ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டும். ஆனால், இந்த சட்டம் இருக்கும்போது, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த புதிய அறிவிப்பு பெரும் தொகையை கட்டணமாக வசூலிக்கும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை ஊக்குவிப்பதற்காக கொண்டு வந்தது போல் உள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தவோ, ஒழுங்குப்படுத்தவோ சட்டம் எதுவும் இல்லை. எனவே, தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும். அந்த விதிகள் செல்லாது என்றும் அந்த விதிகளின் கீழ் செயல்படும் அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்துசெய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
கூடுதல் மனு
இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் மனுவை அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை இணை செயலாளர் பி.அழகேசன் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அரசிடம் ஒப்படைப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகள், 1977-ம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ் செயல்பட்டன. இதன் பின்னர், இந்த பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அரசு நிர்வாகத்தின் கீழ் ஒப்படைப்பது என்று 1976-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி தீர்மானம் இயற்றப்பட்டது.
இதை தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து, மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடங்களை எல்லாம் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு முடிவு செய்து, 1976-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அரசாணை பிறப்பிப் பது. இதன்பின்னர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாரியம் உருவாக்கி 1977-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
வாரியம் அமைப்பு
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தலைமையில், 8 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மெட்ரிக்குலேசன் பள்ளிகளை நிர்வகிக்க வரைவு விதிகள் உருவாக்கப்பட்டது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர், இறுதி விதிகள் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு மெரிக்குலேசன் கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த விதிகள் எல்லாம் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு விதிகள் 1973-க்கு எதிராக உள்ளதாக கூறி மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், இந்த விதிகள் எந்த வகையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அவர் விளக்கமாக கூறவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.
ஒருங்கிணைந்த சட்டம்
மேலும், தமிழகத்தில் உள்ள மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், தொடக்க மற்றும் மழலையர் பள்ளி என்று அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த சட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த ஒருங்கிணைந்த சட்டம், தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டம், கட்டாய இலவச உரிமைச் சட்டம் ஆகியவற்றை உள்ளடங்கியதாக இருக்கும். இந்த சட்டத்தை உருவாக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் கல்விக் கட்டணம் ஒழுங்குமுறை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அவகாசம்
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பதில் மனுவில் தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டம் கொண்டு வர எவ்வளவு காலம் ஆகும் என்று நாங்கள் கேட்டபோது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அவகாசம் கேட்டார். எனவே, இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர். மனுதாரர் வேலு சார்பில் வக்கீல் கே.பாலு ஆஜரானார்

No comments:

Post a Comment