Tuesday, June 16, 2015

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான ( DRAFT CODE OF REGULATIONS FOR PLAY SCHOOLS, 2015 ) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான ( பிளே ஸ்கூல் ) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
ஒன்றரை வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன . இந்த வரைவு
வழிகாட்டுதல் - 2015, www.tn.gov.in/schooleducation என்ற இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது . இந்த வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் , மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் . அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவப் பள்ளிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் , சென்னை - வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார் . இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம் , மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது . " நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்ட பிறகும் , அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசுத் தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை . அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள் ) இந்த விதிமுறைகளை இறுதி செய்து , இணையதளத்தில் வெளியிட வேண்டும் ' என்று கூறி , வழக்கு விசாரணையை ஜூன் 16- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்த உத்தரவைத் தொடர்ந்து , மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது . இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு : வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் , தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் முன்பருவப் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும் . இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் , அங்கீகாரம் புதுப்பிப்பு வழங்கும் அதிகாரம் மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது . அவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் . அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் . பள்ளிக் கட்டடம் : பள்ளிக் கட்டடமானது சொந்தக் கட்டடமாகவோ அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டடமாகவோ இருக்க வேண்டும் . மேலும் , கான்கிரீட் கட்டடமாகவும் , இரும்பு முள்வேலியால் சூழப்படாததாகவும் இருக்க வேண்டும் . அத்துடன் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி என்ற அளவில் வகுப்பறை இடப் பரப்பு அமைந்திருக்க வேண்டும் . வகுப்பறைகள் இரண்டு நுழைவு வாயில்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் . வயது வரம்பு : மழலையர் முன்பருவப் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்கு ஜூலை 31- இல் ஒன்றரை வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் . இந்த வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படக் கூடாது . மேலும் ஒரு வகுப்பறைக்கு 15 குழந்தைகள் என்ற அளவில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் . 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் இந்தப் பள்ளிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும் . பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் . ஆசிரியர் தகுதி : இந்தப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேர்க்கப்படுபவர்கள் , பிளஸ் 2 முடித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும் . அல்லது மனை அறிவியலில் பட்டப் படிப்பு அல்லது பி.எட் . அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருத்தல் அவசியம் . இந்தப் பள்ளிகளில் குழந்தைகள் கண்டிக்கப்படக் கூடாது , தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் பள்ளிகள் இயங்கக் கூடாது . காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு பள்ளி மூடப்பட்டு விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த வரைவு வழிகாட்டுதலில் விதிக்கப்பட்டுள்ளன . கருத்துகளை அனுப்பலாம் ... மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல் - 2015, www.tn.gov.in/schooleducation என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது . பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வருகிற 22- ஆம் தேதிக்குள் " இயக்குநர் , தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் , டி . பி . ஐ . வளாகம் , கல்லூரிச் சாலை , சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது 

No comments:

Post a Comment