Tuesday, July 14, 2015

பள்ளி ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு: வழிகாட்டுதல், நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியீடு!

சென்னை, ஜூலை 14–
பள்ளி ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் உள்ள தொடக்க கல்வி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு மே இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. கவுன்சிலிங் எப்போது நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை நடத்த அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதனை பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா வெளியிட்டார்.
அதில் ஆசிரியர் கலந்தாய்வு நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து கலந்தாய்வு நடத்துவது குறித்த ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது. தொடக்க கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு பணி எந்த தேதியில் நடத்தலாம் என அதன் இயக்குனர் இளங்கோவன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் தொடங்குவது குறித்து இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் இணை இயக்குனர்களிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.
இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டதை யொட்டி விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் இருந்து கவுன்சிலிங் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி கல்விக்கு இடமாறுதல் செல்லும் அலகு விட்டு அலகு மாறுதல் மட்டும் நடைபெறாது என்று கூறப்படுகிறது.
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற இருப்பதால் ஏற்கனவே தமிழகம் முழுவதும் இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் கொடுத்து காத்துக்கொண்டிக்கும் ஆசிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment