Sunday, October 20, 2013


மரத்தடியில் குவியும் மாணவர்கள் - ஓர் ஆச்சரிய ரிப்போர்ட்!

பழனி , ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம்

TNPSC தேர்வு வந்தவுடன் முதலில் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ, புற்றீசல் போல பெருகிவரும் TNPSC கோச்சிங் சென்டர் நடத்தக்கூடியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

மதுரை,சென்னை,சேலம்,கோவை,தூத்துக்குடி என பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான TNPSC பயிற்சி மையங்கள் தோன்றிய வண்ணமாக உள்ளது. TNPSC பயிற்சி மையங்கள் பல விதங்களில் நடக்கிறது. தினமும் வகுப்புகள் அல்லது சனி, ஞாயிறு வகுப்புகள் தினமும் மாலை மட்டும் அல்லது நீங்கள் வரவேண்டாம்.மெட்டீரியல் 4000 ரூபாய் என வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வாங்கி படிக்கிறார்கள்.

TNPSC GROUP 2-கட்டணம்-7,000
TNPSC GROUP 4-கட்டணம்-5,000

என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக அந்த பயிற்சி மையம் பல இலட்ச ரூபாயினை செய்திதாள் விளம்பரத்திற்கே செலவு செய்து வருவது வழக்கம்.

ஆனால் எந்தவித விளம்பரமும் இல்லாமல், எந்தவித கட்டணமும் இல்லாமல்,எந்தவித அலட்டலும் இல்லாமல் நடந்துவரும் ஒரு பயிற்சி மையம்தான் ஆயக்குடி இலவச பயிற்சி மையம்.

சென்ற மாதம் நமது நண்பர்கள் களஆய்விற்காக சென்றிருந்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள ஒரு ஊர்தான் ஆயக்குடி. புளியமரத்தின் அடியில் 3000 மாணவர்கள் அமைதியாக எந்தவித சலசலப்பும் இல்லாமல் நடத்தக்கூடியவர் தவிர வேறு எந்தவித சப்தமும் இல்லாமல் ஒரு நதி ஓடும் ஓடையைப் போல் படித்துக் கொண்டிருந்தர்கள்.

இந்த பயிற்சி மையத்தின் தன்னம்பிக்கை என்ன என்று இதன் இயக்குநர் இராமமூர்த்தியிடம் கேட்டபோது, இதுவரை 4000 மாணவர்களை அரசு ஊழியர்களாக வெற்றியடையச் செய்துள்ளோம்.அந்த நம்பிக்கையில் தான் 32 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குவிந்த விதமாக உள்ளனர்.

1.நீங்கள் தரக்கூடிய நோட்சை மட்டும் படித்தால் போதும் என்று சொல்கிறீர்களாமே?

ஆமாங்க சார். நாங்க Syllabus அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அவற்றை கணிணி மூலம் தட்டச்சு செய்து மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறோம்.

2.லஞ்சம் வாங்கமாட்டேன் என்ற உறுதிமொழி மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற உயரிய வாசகத்துடன் பயிற்சி மையம் நடத்தும் நீங்கள் அரசு பணிக்காக லஞ்சம் கொடுத்தது உண்டா?

லஞ்சம் கொடுத்தது இல்லை.கொடுக்க போவதும் இல்லை.எதிர்காலத்தில் லஞ்சம் இல்லாத சமுதாயமாக மாறவேண்டும் என்பதுதான் என் இலட்சியம்.

3.உங்களுக்கு பக்கபலமாக உள்ளவர்கள் யார் யார்?

என்னுடைய ஒத்த சிந்தனைகள் படைத்த நண்பர்கள் இராமமூர்த்தியாகிய நான் மற்றும் முருகேசன், செல்வராஜ், பூவராகவன், பெரியதுரை, முத்துச்சாமி ஆகியோரால் பழைய ஆயக்குடி நந்தவன மரத்தடி நிழலிலும் நிஜமாக உள்ளோம்.

4. இதுவரை சாதித்தது என்ன?

இதுவரை நமது மரத்தடி மாணவர்களை 4000 பேர் அரசு ஊழியர்களாக உருவாக்கியுள்ளோம். 414- ஆசிரியர் தகுதித்தேர்வில் 500 பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

5. கட்டணம் கட்டாமல் படித்து மாணவர்கள் வெற்றி அடைந்த போது உங்கள் மனநிலை என்ன?

பலர் ஆனந்த கண்ணீரோடு வருவார்கள்.எங்கள் வாழ்க்கைக்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்துள்ளீர்கள் என அவர்களது மகிழ்ச்சியை தொலைபேசியில் சொல்லும் போது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.

6. உங்களுக்கு உதவி செய்பவர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

பழனி தேவஸ்தானம் எங்களுக்கு இடம் கொடுத்துள்ளது.அரசியல் நண்பர்கள்,ஆயக்குடி காவல்துறை, எங்கள் ஊர் பொதுமக்கள், என்னுடைய நண்பர்கள் அனைவருமே எங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள்.

7. இந்த இலவச பயிற்சி மையம் தொடங்கவேண்டும் என்ற் எண்ணம் எப்படி உங்களுக்கு உதயமானது?

நான் அரசு போட்டித் தேர்வு எழுதும் போது சென்னையில் தங்கி படித்தேன்.அப்படி படிக்கும் போது பல சிரமங்களையும்,போக்குவரத்து செலவுகளையும் ஈடுகட்டுவதே மிகவும் சிரமமாக இருந்தது.இந்த சிரமங்களை வேறு மாணவர்கள் படக்கூடாது என்பதால் நாமே ஒரு இலவசபயிற்சி மையத்தினை நடத்தினால் என்ன என்று முடிவு செய்து எனது நண்பர்கள் 6பேர் சேர்ந்து இந்த முயற்சியில் கடந்த 9 ஆண்டுகளாக உள்ளோம்.

இயக்குநர் 
இராமமூர்த்தி
செல் : 94863 01705
நன்றி: 
முனைவர் தமிழ் இனியன். 
அறிவுக்கடல் பதிப்பகம் 
செல் :99769 35585

No comments:

Post a Comment