Tuesday, April 01, 2014

தீருமா தேர்வுகால குழப்பங்கள்?

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத்தேர்வுகள் கடந்த வாரம்
தொடங்கியுள்ளன.
இந்த முறை காலை 9
மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என
பள்ளிக் கல்வித்
துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் மாணவர்கள் பெரும்
சிரமத்தை எதிர்கொள்ள
வேண்டியதாயிற்று.
காலை 9 மணிக்கு முன்னதாக
மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர
வேண்டுமானால்,
வீட்டிலிருந்து அவர்கள் காலை 8
மணிக்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க
வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும்
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த
மாணவர்கள் அதற்கு முன்பாக எழுந்து 8
மணிக்குள் பள்ளிக்குச் செல்ல
தயாராவது என்பது அத்தனை
சுலபமானதல்ல.
கிராமப் பகுதிகளில்
ஏற்கெனவே வழக்கமாக சென்று வந்த
பேருந்து நேரமும், தேர்வு நேரமும் பல
இடங்களில் மிக நெருக்கமானதாக
இருந்தது. ஆனால்
இப்போது மாற்றியமைக்கப்பட்ட
நேரத்திற்கு பல இடங்களில்
பேருந்து வசதி இல்லை. நகரப்
பகுதிகளிலும்கூட இதேபோன்ற
சிரமத்தை மாணவர்கள் எதிர்கொண்டனர்.
அதேபோல, பெரும்பாலான
மாவட்டங்களில் சரிபாதி பள்ளிக்
கூடங்களில் தேர்வு மையங்கள் இல்லை.
அருகிலுள்ள பள்ளிகளில்
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், மாணவர்கள் இன்னும்
முன்கூட்டியே எழுந்து தயாராக
வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில இடங்களில் அரசுப் போக்குவரத்துக்
கழகம் சார்பில் தேர்வுக்காக சிறப்புப்
பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வழக்கமாக இலவச
பேருந்து பயண அட்டை மூலம்
பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்கள்,
தேர்வு நேரத்தில் கட்டணம்
செலுத்தி பயணச்சீட்டு பெற்றுச்
சென்றனர்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில
பகுதி பேருந்துகளில்
வழக்கத்தைவிடவும் கூடுதல் கட்டணம்
வசூலிக்கப்பட்டபோது, மாணவர்கள்
புகார் செய்ததின் பேரில் அதிகாரிகள்
தலையிட்டதால் மாணவர்களுக்குக்
கூடுதல் கட்டணம்
திருப்பி வழங்கப்பட்டது.
பதற்றத்துடன் தேர்வுக்குச் செல்லும்
மாணவர்களுக்கு இவ்வாறான
காலை நேர சம்பவங்கள்
எரிச்சலை ஏற்படுத்தியதாக பலரும்
குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், 8ஆம்
வகுப்பு வரையுள்ள
இடைநிலை வகுப்புகள்
தொடர்ந்து பள்ளியில்
நடந்து வருகின்றன. ஆனால்,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான
தேர்வுக்கூட பணியாளர்களாக
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்களில்
பெரும்பாலானோர்
நியமிக்கப்பட்டிருப்பதால் வழக்கமான
பள்ளிக்கூட பணிகளும்
பாதிக்கப்பட்டிருக்கின்றன.
எழுத்துத் தேர்வுக்கு முன்பாக
நடைபெற்ற செய்முறைத்
தேர்வுகளின்போது,
வேறு பள்ளிக்கூடங்களில்
அமைக்கப்பட்டிருந்த
தேர்வு மையங்களுக்கு மாணவர்கள்
செல்லும்போது அவர்களுடன்
உதவிக்குச் சென்ற ஆசிரியர்கள் இந்த
முறை செல்ல முடியவில்லை.
மாணவர்கள் மனச்சிக்கல்
இன்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்
என்ற நோக்கில் தேர்வு மையங்களில்
தண்ணீர், தேவைப்பட்டால் டீ, பிஸ்கட்
போன்றவையும் தயாராக இருக்க
வேண்டும் என்ற முயற்சியும்
மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால்,
அவை எதுவும் இதுபோன்ற
குளறுபடியால் பலனளிக்கவில்லை.
தனியார் பள்ளிகள் இதுபோன்ற
சிரமங்களை எளிதில் சமாளிக்கும்
திறன் பெற்றவை.
இருந்தபோதும், அவற்றிலும்
இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.
அப்போது, "தேர்வுக் கூடம் மாற்றப்பட்ட
இடங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள்
பொறுப்பேற்று மாணவர்களை
அழைத்துச் செல்ல வேண்டும்' என
சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே, இதில் பாதிக்கப்படுபவை அரசுப்
பள்ளிகளே. இங்கு பயிலும் ஏழை, எளிய
குடும்பங்களைச் சேர்ந்த
மாணவர்களே கடுமையாக
பாதிக்கப்படுகிறார்கள்.
ஏற்கெனவே தேர்வு முறை
மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக்
கொடுக்கிறது என்ற விவாதம்
நடைபெற்று வரும் நிலையில்,
இதுபோன்ற குழப்பங்களைக் களைய
பள்ளிக் கல்வித் துறை உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.
இதற்கு முதல் பணியாக காலை 9
மணிக்கு தொடங்கும்
தேர்வு நேரத்தை மாற்றுவதற்கு பள்ளிக்
கல்வித்
துறை உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
வழக்கமான பள்ளிக்கூட பணிகள்
பாதிக்காதவாறு தேர்வுக்கூட
பணிகளுக்கு கூடுதலான
மாற்று ஏற்பாட்டையும் பள்ளிக் கல்வித்
துறை மேற்கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாது தேர்வு
மைங்களுக்கு மாணவர்கள் எளிதில்
சென்றுவர வசதியாக, தேர்வு நேரத்தில்
தங்கு தடையற்ற
போக்குவரத்துக்கு ஏற்பாடு
செய்யப்படவும் வேண்டும்.

No comments:

Post a Comment