Monday, May 26, 2014

மணப்பாறை பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

மணப்பாறை பகுதியில் பள்ளி செல்ல மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து 70 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சி கிராமங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் பணி அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி தொடங்கியது.
ஊராட்சிகளில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் யாரேனும் பள்ளி செல்லாமல் உள்ளார்களா? அல்லது பள்ளியில் பாதியில் படிப்பை விட்டு விட்டு இருக்கின்றார்களா? அல்லது மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளார்களா என கண்டறியப்பட்டது.
மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறியும் பணி நடைபெற்றதில் புதிதாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த 54 பேரும், பள்ளிக்கு சென்று விட்டு பாதியில் நின்றுவிட்ட 9 பேரும், பள்ளி செல்லா மாற்றுத்திறனாளிகள் 7 பேரும் உள்பட 70 பேர் கண்டறியப்பட்டனர்.
கண்டறியப்பட்ட குழந்தைகள் அவர்களின் வயத்துக்கேற்ப இக்கல்வியாண்டு முதல் கல்வி உரிமை சட்டப்படி பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று கணக்கெடுப்பின் போது விடுபட்ட பள்ளி செல்லாமல், இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகள் இருப்பின் இதுபற்றி 04332 – 260960 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும் படி அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் தெரிவித்து உள்ளார்

No comments:

Post a Comment