Wednesday, May 28, 2014

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலி?

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 540 கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகள் மூலம் சுமார் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான (2014–15) மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த 3–ம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று மாலையுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்தது. மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 759 விண்ணப்பங்கள் விற்பனையானது. ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது விண்ணப்பம் விற்பனையும், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த அண்டு 2 லட்சத்து 38 ஆயிரம் படிவங்கள் விற்பனையாகி உள்ளது. விண்ணப்பித்த மாணவ – மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரமாகும்.
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 20 ஆயிரம் பேர்குறைவாக விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு கலந்தாய்வில் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. இதனால் 80 ஆயிரம் இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடந்தன. ஒரு சில தனியார் கல்லூரிகளில் ஒரு சீட்டு கூட சேரவில்லை.
ஆனால் இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. பொறியியல் படித்து முடித்தவர்கள் பல லட்சம் பேர் வேலையில்லாமல் இருந்து வருவதாலும் பலர் தாங்கள் படித்ததற்கு எவ்வித தொடர்பில்லாமல் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருவதாலும் என்ஜினீயரிங் படிப்பில் சேர முன்வரவில்லை.
வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தாலும், பி.இ. மட்டும் படித்தால் வேலை வாய்ப்பை பெற இயலாது. எம்.இ. மேல் படிப்பு முடித்தால்தான் வேலை கிடைக்கும் என்று அறிந்து கொண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர தயக்கம் காட்டினர்.
பிளஸ்–2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறந்த பொறியியல் கல்லூரி கிடைப்பது அரிது. கட்–ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஏதாவது ஒரு கல்லூரியில் பெயரளவிற்கு இடம் கிடைக்குமே தவிர அது வேலை வாய்ப்புக்கு ஏற்றதாக அமையாது என்று கருதி பல மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரி பக்கம் சாய்ந்துள்ளனர்.
இதனால் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. அது ஒரு லட்சத்திற்கு மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் குறைந்த அளவிலேயே கடந்த ஆண்டு முதல் சேர்ந்து வருகிறார்கள். பெரும்பாலான சுயநிதி கல்லூரிகளில் முழுமையான இடங்கள் நிரம்பவில்லை.
அதனால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வருடம் பி.இ. மாணவர் சேர்க்கையில் மிக மோசமான சூழ்நிலை காணப்படுகிறது. பி.இ. மீதான மோகம் குறைந்து வரும் நிலையில் தரமான கல்லூரிகள் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இடையே கடும் போட்டியும் ஏற்படுகிறது.
சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் சிறந்த உள் கட்டமைப்பு, தரமான ஆசிரியர்கள் கொண்ட ஒரு சில தனியார் கல்லுரிகள் திறம்பட செயல்படுவதால் அங்கு இடங்கள் விரைவில் நிரம்பி விடுகின்றன.
எனவே எதிர்வரும் காலங்களில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நிற்கும்

No comments:

Post a Comment