Thursday, June 26, 2014

நடப்பு கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: தமிழக அரசு இலக்கு!

நடப்பு கல்வியாண்டில் (2014-15) 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இத் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் ஆண்டில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 790 லேப்-டாப்களும், 2012-13-ஆம் ஆண்டில் 7 லட்சத்து 56 ஆயிரம் லேப்-டாப்களும், 2013-14-ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் லேப்-டாப்களும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்கள் முழுவதுமாக வழங்கப்பட்டு விட்டன. இதுவரை மூன்று கட்டங்களில் 17 லட்சம் லேப்-டாப்கள் மாணவ, மாணவியருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடி ஆகும். இந்த லேப்-டாப்கள் எல்காட் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அவை மாவட்டங்களிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு லேப்-டாப்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
2014-15-ஆம் கல்வியாண்டில் 5.50 லட்சம் லேப்-டாப்கள் மாணவ, மாணவியருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக, அனைத்து மாவட்டங்களில் இருப்பில் உள்ள லேப்-டாப்களின் எண்ணிக்கை, சேவை மையங்கள், லேப்-டாப்களின் பாதுகாப்பு நிலை, மாணவ, மாணவியருக்கு விரைந்து விநியோகம் செய்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிகாரிகளுக்கு வழங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறைச் செயலாளர் சாந்தினி கபூர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் தா.கி.ராமச்சந்திரன், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் த.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment