Sunday, August 03, 2014

புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி: துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில், 2014-15 நடப்புக் கல்வியாண்டில் புதிதாக 12 கல்வியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் துவங்குவதற்கு முன்னதாக, கல்லூரிகளின் பேராசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் போன்றோர்களை ஒருங்கிணைத்து 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறவேண்டும், கல்வி பயிற்றுவிப்பது எப்படி, பிரச்னைக்கு இடம் தராமல் நிர்வகிப்பது எப்படி, மாணவர்களிடம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், பெற்றோர்களிடம் நிர்வாகத்தினர் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத காரணத்தால் பிரச்னை எழும்போது சமாளிப்பது எப்படி போன்றவை குறித்து பல்கலைக்கழகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கான கல்வி பயிற்றுவித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து விளக்கம் தரப்படும்.
இந்த ஆண்டுக்கு, ஏற்கனவே சென்னை, கோவை ஆகிய இடங்களில் ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்2-ம் தேதி இன்று(நேற்று) மதுரை கேஎல்என் கல்வியியல் கல்லூரியில் மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆகஸ்ட்3-ம் தேதி இன்று நெல்லையிலும், 4-ம்தேதி சேலத்திலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டங்களில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது, மாணவர் சேர்க்கையிலும் அரசு உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி கூறப்படுகிறது. இதனால், 2 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள 60 சுயநிதிக் கல்லூரிகள் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் 21 கல்வியியல் கல்லூரிகளிலுள்ள 2,169 இடங்களுக்கு விண்ணப்பிக்க 29 இடங்களில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டது. இதில் 10,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,169 தகுதியான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்கி, 9-ம் தேதி வரை நடைபெறும். ஒற்றைச்சாளர முறையில் நெல்லை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு முடிந்தவுடன் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கும்.
கல்லூரி, பள்ளிகள் இருக்கும் வரை பிஎட் படிப்புக்கான மவுசு குறையாது. முன்பு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது, 1-5-ம் வகுப்பு வரை மட்டுமே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் வாய்ப்பு கொடுக்கப்படுவதால், பிஎட் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல வெளிநாடுகளிலும் தமிழக பிஎட் கல்விப் பாடத்திட்டத்தை பின்பற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அகில இந்திய அளவில் பிஎட் படிப்புக்கான காலஅளவை 2 ஆண்டுகளாக நீடிப்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டது. துணைவேந்தர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக எங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளோம். அதை வெளிப்படையாக கூறஇயலாது.
2014-15 நடப்புக் கல்வியாண்டில் 12 புதிய கல்வியியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment