Sunday, August 03, 2014

நாளையோடு நிறைவு பெறுகிறது பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளில் 2014-15-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமையோடு (ஆக.4) நிறைவு பெற உள்ளது.

இதுவரை 99,281 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 534 பொறியியல் கல்லூரிகள் 2,87,646 பி.இ., பி.டெக். இடங்கள்
உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2014-15-ஆம் கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் மொத்தம் 2,04,077 இடங்கள் இடம்பெற்றன.
முன்னதாக, விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 ஆகிய இரு தேதிகளில் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி நடத்தப்பட்டது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கியது. இதில், சனிக்கிழமை வரை 1,52,615 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
இவர்களில் 99,281 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை பெற்றுச் சென்றனர். 52,927 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்து விட்டனர். 407 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை: இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 25,010 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 18,243 பேர் இசிஇ பிரிவையும், 15,868 பேர் சிவில் பிரிவையும், 13,128 பேர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், 11,026 பேர் இஇஇ பிரிவையும், 4,988 பேர் பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவையும், மற்றவர்கள் இதரப் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு திங்கள்கிழமையோடு (ஆக.4) நிறைவுபெற உள்ள நிலையில் பல்வேறு பொறியியல் பிரிவுகளின் கீழ் 1,04,796 இடங்கள் காலியாக உள்ளன.
ஆக.6-இல் துணைக் கலந்தாய்வு: பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி பொறியியல் துணைக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் பதிவு செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கத் தவறிய பொதுப் பிரிவு மாணவர்களும், இந்த துணைக் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
எஸ்.சி. பொதுப் பிரிவினருக்கு... பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வில் எஸ்.சி. அருந்தியினர் உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவு தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) இன விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
ஏற்கெனவே பொதுப் பிரிவு கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற எஸ்.சி. பொதுப் பிரிவு மாணவர்களும் ஒதுக்கீட்டு ஆணையுடன் பதிவு செய்துவிட்டு, சிறப்பு கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment