Sunday, August 03, 2014

'முதல் வகுப்பு மாணவர்களுக்கே மகாபாரதத்தை அறிமுகம் செய்வேன்':உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே

''இந்தியர்கள் தங்களின் பழைய பாரம்பரியங்களை அறிந்து கொள்ள வேண்டும். மகாபாரதம், பகவத் கீதை போன்றவற்றை, பள்ளிப் பாடத் திட்டங்களில், முதல் வகுப்பிலேயே அறிமுகம் செய்ய வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே கூறினார்.டில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:


குரு, சிஷ்யன் போன்ற, நம் பழைய பாரம்பரியம் காணாமல் போய் விட்டது. அந்த பாரம்பரியம் தொடர்ந்திருந்தால், நம் நாட்டில், பயங்கரவாதம், வன்முறைகள் போன்றவை நிகழாது.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், ஜனநாயக நாடுகளாக உள்ளன. ஜனநாயக நாட்டில், ஒவ்வொருவரும் நல்லவர்களாக இருந்தால், நல்லவர்களையே தேர்வு செய்வர். அப்படிப்பட்ட நபர், யாரையும் பாதிக்கும் செயலில் ஈடுபட மாட்டார்.ஒவ்வொரு நபரிடமும், நாம் நல்ல விஷயங்களை போதித்தால், அனைத்து இடங்களிலும், நாம் வன்முறையை நிறுத்தி விடலாம். இந்த நிலைமையை உருவாக்க வேண்டும் எனில், நாம் நம் பழைய பாரம்பரியத்திற்கு, மீண்டும் செல்ல வேண்டும்.

மாணவர்களுக்கு முதல் வகுப்பிலேயே, மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை அறிமுகப்படுத்த வேண்டும்.நான் சொல்வதை, மதச்சார்பற்றவர்கள் என கூறிக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால், முதல் வகுப்பு மாணவர்களுக்கே, பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை அறிமுகம் செய்வேன்.இப்படி செய்வது, எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும் வழியாகும். நான் சொல்வதெல்லாம், எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் உள்ளனவோ, அவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, தவே கூறினார்.

No comments:

Post a Comment