Tuesday, November 26, 2013

"அரசியல் அமைப்பு பாடம் கட்டாயமாக்க வேண்டும்'பல்கலை விழாவில் ஹைகோர்ட் நீதிபதி பேச்சு

திருச்சி: ""பல்கலையில், இந்திய அரசியல் அமைப்பு குறித்த பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்,'' என, பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை, 30வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசைய்யா பங்கேற்று, 188 மாணவியர்
உள்பட, 432 பேருக்கு பட்டங்களும்,
அறக்கட்டளைகளின் தங்கப் பதக்கம், சான்றிதழை, 62
பேருக்கு வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதி நாகமுத்து பேசியதாவது:
சவால்களை அர்ப்பணிப்பு மனதுடன்
எதிர்கொண்டால் தான், நாட்டில் மாற்றம் ஏற்படுத்த
முடியும். பாட ரீதியான அறிவை வளர்ப்பதில்
மட்டும் கவனம் செலுத்தாமல், நாம் வாழும் நாட்டின்
நிர்வாக முறையையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆவணங்களாக உள்ள, "இந்திய அரசியல் அமைப்பு'
தான் ஆளுகிறது. "வேற்றுமையில் ஒற்றுமை'
என்பதை உலகுக்கு இந்தியா எடுத்துக்
காட்டியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும்
சட்டத்துக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.
இதிலிருந்து எந்த ஒரு அரசு அமைப்பும் விலகிச்
செல்ல நீதிமன்றம் அனுமதிக்காது.
காற்று, குடிநீர், உணவு போன்ற
இயற்கை வளங்களை அனுபவித்தல் போன்று,
நாட்டின் குடிமக்களுக்கு உள்ள உரிமைகள் போல்,
தேசியக்கொடி, தேசிய கீதத்தை மதித்தல் உள்பட, 11
அடிப்படை கடமைகள் மக்களுக்கு உள்ளது.
பெரும்பாலான மக்களுக்கு உரிமையும், கடமையும்
தெரியவில்லை. 126 கோடி மக்களை நிர்வகிக்கும்
அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த
பாடத்திட்டங்கள் இல்லை. உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி பருவத்திலோ அல்லது பல்கலை அளவிலோ "இந்திய
அரசியல் அமைப்பு' பாடம் கட்டாயமாக்கப்பட
வேண்டும்.
வறுமை, கல்லாமை, உடல்நலம்,
வேலையில்லாமை போன்ற சவால்களை எதிர்கொள்ள
மத்திய, மாநில அரசுகள்
தொடந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனாலும், தொடர்ந்து போராட வேண்டிய
நிலை தான் உள்ளது. பொது வாழ்வில்
நேர்மையில்லாமை மற்றும் ஊழல் ஆகிய இரண்டும்
நாட்டுக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது.
இதை அகற்ற உறுதியான நோக்கம் வேண்டும்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் வன்முறை சம்பவம்
தற்போது நடக்கிறது. அதனால் நல்லொழுக்கம்,
உண்மை, சகோதரத்துவம், நேர்மை, ஒற்றுமை,
வன்முறை கைவிடுதல்
போன்றவற்றை பயிற்றுவிக்கும் வகையில்,
பாடத்திட்டங்கள் உருவாக்க வேண்டும்.
பட்டங்களை வழங்கி வேலைவாய்ப்புக்கு தகுதியான
இளைஞர்களை உருவாக்குது மட்டுமே பல்கலையின்
நோக்கமாக இல்லாமல், இளைஞர்களை சரியான
பாதையில் செல்ல வழிகாட்டி, எதிர்காலத்தில்
ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நீண்ட காலத்துக்கு மேற்கத்திய நாடுகளிடம்
இருந்து அறிவை நாம் பெற முடியாது.
விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுனர்கள்,
இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள் உள்பட
அனைத்துத் துறைகளிலும் வல்லுனர்கள்
தேவைப்படுகின்றனர். அதனால் மாணவ, மாணவியர்
சாதாரண மக்களாக இல்லாமல், தனித்துவ
அறிவு பெற்றவர்களாக மாற வேண்டும்.
இவ்வாறு நீதிபதி நாகமுத்து பேசினார்.
பட்டம் பெற, 46ஆயிரத்து, 433 மாணவியர் உள்பட,
68 ஆயிரத்து, 320 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில்,
432 பேர் மட்டுமே நேரில் பெற்றனர். விழாவில்,
திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன்,
"பழங்குடியின மக்களின் பொருளாதார நிலை'
குறித்து ஆய்வு மேற்கொண்டு, டாக்டர்
(பி.ஹெச்டி.,) பட்டம் பெற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment