Saturday, April 26, 2014

10, 12-வது வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனை நிகழ்ச்சி

10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் மேலும் எந்த படிப்பை படிக்கலாம்?. என்ன குரூப் எடுக்கலாம்?. எந்த படிப்பு படித்தால் எதிர்காலத்தில் என்ன பதவிக்கு வரலாம்?. என்ன வேலை கிடைக்கும்? என்பதை ஒவ்வொரு துறைக்கும் உள்ள நிபுணர்களை கொண்டு மாணவர்களை தெளிவாக இருக்கச்செய்ய அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதல் முதலாக மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மாணவர்களின் வருங்கால கல்வி சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியை அனைத்து மாவட்டத்திலும் நடத்துங்கள். பெரிய பள்ளிக்கூடமாக இருந்தால் அந்த பள்ளியிலேயே நடத்தலாம். மாவட்டத்தில் 2 அல்லது 3 இடங்களில் நடத்தி அனைத்து மாணவர்களையும் அங்கு வரவழைக்கலாம். இந்த நிகழ்ச்சியை கோடை விடுமுறை நாட்களில் நடத்தப்பட வேண்டும். மொத்தத்தில் மாணவ-மாணவிகள் பயன்பெறவேண்டும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9-ந்தேதி வர உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே அந்த முடிவு வருவதற்கு உள்ளாக இந்த கல்வி ஆலோசனை நிகழ்ச்சியை நடத்தவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment